• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில்; மாசி மகா சிவராத்திரி விழா துவக்கம்

தேவதானபட்டியில் பிரசித்து பெற்ற மூங்கிலணை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் இன்று (மார்ச் 1) மாசி மகா சிவராத்திரி திருவிழா கோலாகலமாக துவங்கியது. எட்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி விடிய, விடிய சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் பிரசித்து பெற்ற மூங்கிலணை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. தேவதானப்பட்டி பஸ் ஸ்டாப்பை ஒட்டி, பிரிவு ரோட்டிலிருந்து சுமார் 3 கி.மீ., தொலைவில் மஞ்சள் ஆற்றங்கரையோரம் இக் கோயில் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும். மிகவும் பழமை வாய்ந்த இக்கோயில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. காமாட்சி அம்மனுக்கென்று, தனி விக்ரஹம் கிடையாது. இதனால் அடைக்கப்பட்ட கதவிற்கு மட்டு 3 கால பூஜை நடைபெறுகிறது. குலதெய்வம் தெரியாதவர்கள் பலருக்கும் இந்த அம்மனை தங்களது குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். திருவிழா காலங்களில் பக்தர்களின் வெள்ளத்தில் தேவதானப்பட்டி களை கட்டும். மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள் தோறும் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பொங்கல் வைத்தும், தீச்சட்டி எடுத்தும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம்.

இச்சூழ்நிலையில், மாசி மகா சிவராத்திரி திருவிழா இன்று (மார்ச் 1) துவங்கியது. வரும் 8ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி கோயிலுக்கு வரும் பக்தர்கள் மஞ்சள் ஆற்றில் நீராடி அம்மனை வழிபடுவர். மாலை 6 மணிக்கு மேல் உறுமி முழங்க சாயரட்சை பூஜை நடக்கும். இரவு 7 மணிக்கு மேல் ராஜகம்பளத்தாரின் தேவராட்டம் நடைபெறும். அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை நடைபெறும்.

எட்டு நாட்கள் திருவிழாவை முன்னிட்டு, பெரியகுளம் பஸ் ஸ்டாண்டிலிருந்து அதிகாலை 4:00 முதல் அடுத்தடுத்து தொடர்ச்சியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் வெளியூர் பக்தர்கள் சிரமமின்றி கோயிலுக்கு வந்து செல்லலாம்.

திருவிழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் அழ.வைரவன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.