• Sat. Apr 20th, 2024

அய்யப்பன் கோவில்..அல்லா கோவில்னு புகுந்து விளையாடும் அமைச்சர் மகன்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பால்வளத்துறை அமைச்சர் நாசரின் மகன், அங்குள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
தாம் வெற்றிபெற்றால் தனது வார்டுக்குள் வரும் மத வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்த உதவுவேன் என உறுதி அளித்து வருகிறார்.
தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய இன்றுடன் சேர்த்து இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளதால் பிரச்சாரக் களம் அனல் பறக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் 4-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார் பால்வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் ஆசிம் ராஜா. இவர் தனது தந்தையை போல் சாதி, மத, வேறுபாடுகளை கடந்து அனைத்து தரப்பினரையும் அனுசரித்து செல்லும் வகையில் தனது செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் ஆவடி 4-வது வார்டுக்குட்பட்ட சி.ஆர்.பி.எஃப். நகரில் உள்ள ஐயப்பன் கோவிலில் தமது வெற்றிக்காக புஷ்பாஞ்சலி சிறப்பு வழிபாடு நடத்தியிருக்கிறார்.

தாம் ஒரு இஸ்லாமியராக இருப்பினும் கூட மாற்று மதத்தை சேர்ந்த கட்சியினர் மனம் வருந்தாதபடி அவர்களின் அழைப்பை ஏற்று அவர் ஐயப்பன் கோவிலுக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தாம் வெற்றி பெற்றால் தமது வார்டுக்குள் வரக்கூடிய கோவில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மேம்பாட்டுக்காக தனிப்பட்ட ரீதியாகவும், அரசின் நிதியை கொண்டும் உதவுவேன் என அமைச்சர் நாசர் மகன் ஆசிம் ராஜா உறுதி மொழி அளித்து வருகிறார்.

நாம் ஏற்கனவே கூறியிருந்ததை போல், ஆவடி மாநகராட்சியின் துணை மேயராக ஆசிம் ராஜா வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கிறார்கள் உள் விவரம் அறிந்தவர்கள். உதயநிதி ஸ்டாலின், சபரீசன் என அனைவரிடமும் நேரடி பரிச்சயம் பெற்றுள்ள ஆசிம் ராஜாவுக்கு மேலிடம் நிச்சயம் துணை மேயர் பதவிக்கு கிரீன் சிக்னல் கொடுக்கும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். ஆவடி மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு பொதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் நாசர் மகனை போலவே மற்றொரு அமைச்சரான செஞ்சி மஸ்தானின் மகனும் இந்த தேர்தலில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரும் கோயில், தேவாலயம், மசூதி என பாகுபாடின்றி அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *