‘நம்மைக்காக்கும் 48’ திட்டத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு விருது – மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ்குமார் பெருமிதம் கொண்டார்.
தமிழக சுகாதாரத்துறையால் அறிவிக்கப்பட்ட இன்னுயிர் காப்போம் ‘நம்மைக்காக்கும் 48’ திட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மாநிலத்திலேயே முதல் பரிசை வென்றுள்ளது என மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார் பேட்டி அளித்தார்.
கடந்த டிசம்பர் 2021-ம் ஆண்டு “இன்னுயிர் காப்போம் திட்டம் – நம்மைக் காக்கும் 48(IKT -NK 48) திட்டம்” தமிழக முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது வரை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி எந்தவொரு நபரும் சாலை விபத்தில் காயம் அடைந்தால் NK 48 திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் ரூபாய் ஒரு லட்சம் வரை எவ்வித கட்டணமுமின்றி உயிர்காக்கும் அனைத்து சிகிச்சைகளும் பெற இயலும், தற்போது இத்திட்டத்தின் வரவேற்பு காரணமாக கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இத்திட்டத்தின் கீழ் இதுவரை ரூபாய் ஒரு லட்சமாக இருந்த தொகை தற்பொழுது இரண்டு லட்சமாக உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார் கூறுகையில், 2021ஆம் ஆண்டு இத்திட்டம் துவக்கியதிலிருந்து மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை தமிழகத்திலேயே முதலிடம் பெற்று சிறப்புடன் இயங்கி வருகிறது. இந்த சாதனைக்காக அவசர மருத்துவ சிகிச்சை பிரிவு துணைத் தலைவர் பேராசிரியர் சரவணக்குமாருடன் நானும் விழாவிற்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டேன்.
மேலும் இந்த திட்டத்தில் தலைசிறந்த மருத்துவர்கள் மூலம் 24 × 7 மணி நேரமும் சிறந்த முறையில் பணியாற்றி, ஏழை எளிய மக்களின் விலைமதிப்பற்ற உயிரை காப்பாற்றி வருகிறார்கள். மேலும் இத்திட்டத்தினை விரைவாக செயல்படுத்தும் நோக்கில் நேரடி மேற்பார்வையில் 6 Data Entry Operator-களைக் கொண்டு தனி குழு பணியமர்த்தப்பட்டு 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது என்றார்.
மேலும் அவர், அவசர சிகிச்சை துறையானது “தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன் முயற்சி(TAEI)” எனப்படும் திட்டத்தோடு ஒருங்கிணைந்து Zero Delay எனப்படும் உடனடி அவசர சிகிச்சை வழங்குகிறது. நோயாளிகளை நோயின் தீவிர தன்மைக்கு ஏற்ப சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டு உடனடி சிகிச்சை அளித்தல். ஆறு மணி நேரத்திற்குள் அவசர அறுவை சிகிச்சை செய்வது. அவசர சிகிச்சை துறைக்குள் எல்லாவிதமான இரத்தம் மற்றும் ஸ்கேன் பரிசோதனைகளை செய்வது. எல்லாவிதமான உயர்தரமான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உடனுக்குடன் வாங்கப்பட்டு பயன்படுத்தப்படுவதால் பல ஆயிரக்கணக்கான ஏழை நோயாளிகளின் உயிரும் உடலும் காப்பாற்றப்பட்டு நலமுடன் உள்ளனர். இதைத் தவிர அவசர சிகிச்சைத் துறையில் பட்ட மேற்படிப்பு M.D.(Emergency Medicine) தொடங்கப்பட்டு ஒரு வருடத்திற்கு 4 மாணவர்கள் வீதம் பயிற்சி பெறுகின்றனர். அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் முழு சிகிச்சை விபரங்களும் “கணினி மயமாக்கப்பட்ட பதிவேட்டில் (Trauma Registry)” பதிவேற்றம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு உலக வங்கி பிரதிநிதிகள் அடங்கிய குழு நமது அவசர சிகிச்சைத்துறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்து மிகவும் பாராட்டியதோடு “தமிழ்நாட்டிலேயே முன் மாதிரியான அவசர சிகிச்சைத்துறை” என சான்றளித்து மற்ற மருத்துவ கல்லூரிகளின் அவசர சிகிச்சைத்துறை மருத்துவர்கள் இங்கு பயிற்சி எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி அதன் பேரில் பயிற்சி அளிக்கப்பட்டது’ என்றார்.
மேலும் இதுகுறித்து அரசு ராஜாஜி மருத்துவமனை அவசர மருத்துவ சிகிச்சை பிரிவு தலைவர் பேராசிரியர் டாக்டர் கே பி சரவணக்குமார் கூறுகையில், இன்னுயிர் காப்போம்… நம்மை காக்கும் 48 திட்டத்தின் நோக்கம் என்பது, எதிர்பாரா விபத்தில் சிக்குகின்ற நபர்களை மீட்டு, உடனடி அவசர சிகிச்சையின் மூலமாக அவர்களது உயிரைக் காப்பதுதான். அவ்வாறு விபத்தில் பாதிக்கப்பட்ட நபர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவோ அல்லது வெளிமாநிலம் அல்லது வெளி நாட்டவராகவோ இருக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ், அவர்கள் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அல்லது அரசு மருத்துவமனையிலோ சிகிச்சை அளிப்பது தான் இதன் முக்கிய நோக்கம். அவ்வாறு விபத்து சிக்கிய நபர்களை மீட்டு கொண்டு வருகின்ற நபர்களுக்கு வேறு எந்த சிக்கல்களும் ஏற்படக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது அதனை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கு ரூபாய் 5 ஆயிரத்தை பரிசாகவும் வழங்குகிறது. மேலும் எந்தவித தாமதம் இன்றி உடனடியாக சிகிச்சை வழங்குவதற்கு ஏதுவாக ரூபாய் ஒரு லட்சம் என்பதிலிருந்து தற்போது ரூபாய் 2 லட்சம் என இதற்கான நிதியை அதிகப்படுத்தி அறிவித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நம்மை காக்கும் 48 திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்த டிசம்பர் மாதம் வரை தமிழ்நாட்டிலேயே அதிகபட்ச நோயாளர்களை காப்பாற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சாதனை புரிந்துள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக இதுவரை 12 ஆயிரத்து 34 நோயாளிகள் உயிர் காப்பாற்றப்பட்டு நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். இதன் மதிப்பு 15 கோடியே 74 லட்சத்து 95 ஆயிரத்து 360 ரூபாய் ஆகும். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை செய்துள்ள இந்த சாதனையை கௌரவப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் விருது வழங்கி சிறப்பித்துள்ளார். இந்த வரிசையில் இரண்டாவது மாவட்டமாக விழுப்புரமும் மூன்றாவது மாவட்டமாக திருவண்ணாமலையும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த விருதால், அடித்தட்டு ஏழை மக்களுக்கு சிறந்த தரமான தாமதமற்ற சிகிச்சை வழங்க எங்களுக்கு உத்வேகமாக அமைந்துள்ளது என்பதுதான் உண்மை என்றார்.
பேட்டியின் போது உதவி நிலைய மருத்துவர்கள் டாக்டர் சுமதி, மற்றும் டாக்டர் முருகு பொற்செல்வி, அவசர மருத்துவ சிகிச்சை பிரிவு உதவி பேராசிரியர் சிவசங்கர், அறுவை சிகிச்சை பேராசிரியர் குமரவேல் நிறைய மருத்துவர் கேப்டன் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.