• Tue. Feb 18th, 2025

தீபாவளி விற்பனையில் ஆவின் பொருட்கள் புதிய மைல்கல்

Byமதி

Nov 5, 2021

தீபாவளிக்கு இதுவரை இல்லாத வகையில் ஆவின் பொருட்கள் ரூ.83 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஆவின் நிறுவனம் வரலாற்றில் இல்லாத அளவில், தீபாவளி விற்பனை அமைந்துள்ளது. 83 கோடி ரூபாய்க்கு ஆவின் பொருட்கள் விற்பனையாகி இதுவரை இல்லாத அளவில் புதிய சாதனைப் படைத்துள்ளது.

குறிப்பாக, கடந்த ஆண்டு 600 டன் விற்பனையான ஆவின் நெய், இந்த ஆண்டு 900 டன் விற்பனை ஆகியுள்ளது. இனிப்பு வகைகளை பொறுத்த வரையில் கடந்த ஆண்டு 270 டன் விற்பனை ஆனது. இந்த ஆண்டு 400 டன் விற்பனை ஆகியுள்ளது.

பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ.330 கோடி அளிக்கப்பட்டுள்ளது. அரசு துறைகளை சார்ந்த அனைவரும் ஆவின் இனிப்புகளை வாங்கி உள்ளனர். 27 லட்சத்து 60 ஆயிரம் வீடுகளுக்கு தினமும் ஆவின் பால் விநியோகிக்கப்படுவதால், பால் கவர்களில் ஆவின் இனிப்புகள் விளம்பரம் செய்யப்பட்டது. அந்த வகையில் ஆவின் பொருட்கள் பற்றிய விளம்பரம் ஒரே நேரத்தில் 27 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கும் நேரடியாக சென்றடைந்துள்ளது.

அடுத்தவாரம் சிங்கப்பூருக்கு ஆவின் பொருட்களை அளிக்க உள்ளோம். மிக விரைவில் பக்கத்து மாநிலம் மற்றும் நாடுகளுக்கும் ஆவின் பொருட்களை விற்பனைக்கு அனுப்பி வைக்க உள்ளோம் என அவர் கூறினார்.