
மதுரை காளவாசல் பெத்தானியபுரம் ஆசைதம்பி தெரு என்னும் பகுதியில் குடும்பத்துடன் வசித்துவரும் சதிஸ்குமார் என்ற கூலித்தொழிலாளி அவரது வீட்டிற்கு செல்லும் பாதையில் தனிநபர் இடத்தில் வசந்த முத்து மாரியம்மன் என்ற பெயரில் கோயில் கட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தனது வீட்டிற்கு செல்வதற்கான பாதை இல்லை என கூறி பலமுறை மதுரை மாநகராட்சிக்கு மனு கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்த நிலையில் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் முறைப்படி நோட்டீஸ் அனுப்பி பின்னர் ஆக்கிரமிப்பை அகற்றியபோது முழுமையாக அகற்றவில்லை.
இந்நிலையில் கோவில் திருவிழாவானது கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. அப்போது சதீஷ்குமார் இல்லத்திற்கு செல்லக்கூடிய 5 அடி அகலம் உள்ள பாதையையும் முழுமையாக அடைத்துள்ளனர்.
பின்னர் கடந்த 23 ஆம் தேதியன்று இரவு கோவில் திருவிழா நடைபெற்றபோதே கோவில் நிர்வாகிகளான காசி மற்றும் அவரது உறவினர்கள் கும்பலாகவந்து திடிரென சதீஸ்குமாரின் வீட்டு முன்பாக நின்றபோது அவரை பார்த்து நீதிமன்றத்தில் வெற்றி பெற்றால் பெரிய ஆளா உனக்கு எந்த விதத்திலும் வழிவிட முடியாது என கூறியபடி அவரை தள்ளிவிட்டு ஓடகூட விடாமல் தரையில் அமரவைத்து காலால் மாறி மாறி எட்டி உதைத்து தாக்குதல் நடத்தினர்.
மேலும் அருகில் இருந்த கட்டை கற்களை எடுத்து கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.அப்போது சதீஸ்குமாரின் மனைவி மகள் ஆகியோர் கெஞ்சி கதறிய நிலையிலும் கண்டுகொள்ளாமல் கும்பலாக சேர்ந்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதில் கைகள், தலையில் காயங்களுடன் ரத்தம் சொட்ட சொட்ட இருந்த சதீஸ்குமார் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த கரிமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி சதீஸ்குமார் மற்றும் அவரது சகோதர்ரையும் தாக்கிய காயப்படுத்தியதாக கோவில் நிர்வாகிகளான காசி அவரது உறவினர்களான ஸ்ரீராம், ஜெய்கணேஷ், பாலா உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவர்களை தேடிவருகின்றனர்.
ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை முழுமையாக நிறைவேற்றாமல் மாநகராட்சி அலட்சியம் காட்டிய நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நபரையே கொடூரமாக கும்பலாக தாக்கியது குறித்த சிசிடிவி காட்சி் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
