கோவையில் நேற்று பெய்த கன மழை காரணமாகத் உக்கடம், கோவை அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், துடியலூர், கவுண்டம்பாளையம் மற்றும் கணபதி ஆகிய பகுதிகளில் பிரதான சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியதுடன், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று மாலை பெய்த கன மழையினால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மேடான பகுதிகளுக்கும் வெள்ள நீர் புகுந்தது.
உக்கடம், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, ராமநாதபுரம் சிங்காநல்லூர், துடியலூர் எச்.ஜி.ஓ காலனி (NGO Colony), கவுண்டம்பாளையம் அடுத்த நல்லாம்பாளையம் சாலைகள் அனைத்தும் வடிகால் வசதியின்றி வெள்ளக்காடாக மாறின.

இதனால் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர்.
அதே போல, கணபதி பி.என்.டி (P&T) காலனி மற்றும் 6 புளிய மரம் ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் பெருக்கெடுத்த மழைவெள்ளம், மக்களின் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் வீடுகளில் இருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் தானியங்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்தன.
கடந்த காலங்களில் கோவையில் எவ்வளவு கனமழை பெய்தாலும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகாத நிலை இருந்தது. ஆனால், சமீப காலமாக நகரின் பிரதான நீர்வழிப் பாதைகளும், ஓடைகளும் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டதன் விளைவே இந்தத் திடீர் வெள்ளப்பெருக்குற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும், மழைக் காலத்திற்கு முன்னதாக மழைநீர் வடிகால்களை தூர்வாராததும், கழிவுநீர் தடையின்றிச் செல்வதற்கு முறையான வழிவகைகளைச் செய்யாததுமே மாநகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
ஒவ்வொரு மழைக் காலத்திலும் இதே போன்ற அவதி தொடர்வதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீர் வடிகால்களைச் சீரமைக்க வேண்டும் என்றும் கோவை வாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.
