• Sat. Apr 20th, 2024

நாளை தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர்: கேள்வி கேட்க தயாராகும் அதிமுக

தமிழகத்தில் 2022-ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உள்ளட்ட பிரச்சனைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து எதிர்கட்சிகள் கேள்விகளை தொடுக்க தயாராகி வருவதால் சட்டசபையில் பரபரப்பின் உச்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், 2022-ம் ஆண்டுக்கான முதல்சட்டசபை கூட்டம் நாளை தொடங்க உள்ளது.


சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த கூட்டம் வழக்கம்போல் ஆளுநர் ஆர்.என்.ரவியின் புத்தாண்டு உரையுடன் தொடங்க உள்ளது. செப்டம்பர் மாதம் பதவியேற்ற பிறகு ஆளுநர் ஆற்றும் முதல் உரை இதுவாகும். இந்த கூட்டத்தொடரில் ஆளும் திமுக அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் சுட்டிக்காட்ட வாய்ப்புள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப வாய்ப்புள்ளதால், பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.


10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ள திமுக அரசு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று, சட்டம்-ஒழுங்கு நிலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், முக்கிய எதிர்கட்சியான அதிமுக திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டது.,


இதன காரணமாக சட்டசபையில் திமுக அரசின் நடவடிக்கைகள் குறித்து அதிமுக பல்வேறு கேள்விகளை எழுப்ப வாய்ப்புள்ளது. மேலும் சமீபத்தில் சென்னை உள்ளிட்ட தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் மழைவெள்ளம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. வடகிழக்கு பருவமழையால் விளைந்த பயிர்கள் சேதமடைந்த நிலையில், பள்ளி மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மாணவிகளின் தற்கொலை அதிகரித்து வருகிறது.


மேலும் முன்னாள் எம்எல்ஏக்க்ள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்களை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருவது எதிர்கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிமுக அரசு திமுகவுக்கு கடும் நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது. அதே சமயம், இந்த கூட்டத்தொடரில் திமுக அரசு சில முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சட்டசபை கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், அனைத்து எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலருக்கும் கொரேனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பெரம்பலூர் திமுக எம்எல்ஏ பிரபாகரன் மற்றும் அறந்தாங்கி எம்எல்எ ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தங்களை தனிமைப்படுத்திக்காண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த ஒரு வருடமாக செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை கூட்டத்தொடர் தவிர்க்கப்பட்டு வந்த நிலையில். ஒரு வருடத்திற்கு பிறகு தற்போது மீண்டும் ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை கூட்டம் நடத்த அரசு தயராகி வந்தது. ஆனால் தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், ஒமைக்ரான் தொற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாலும், அரசு அந்த முயற்சியை கைவிட்டு மீண்டும் கலைவாணர் அரங்கத்திற்கே சட்டசபை கூட்டத்தை மாற்றியுள்ளது.


நாளை தொடங்கவுள்ள சட்டசபை கூட்டத்தொடரில், கவர்னர் உரைக்குப் பிறகு அலுவல் ஆலோசனைக் குழு கூடி கூட்டத்தொடர் நடைபெறும் காலம் குறித்து முடிவு செய்யும். இந்த கூட்டத்தொடர் சில காலம் நீடிக்கும் என்றும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் ஆளும்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *