தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியின் 98 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. நாசரேத் தூய யோவான் பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் ஆரம்ப ஜெபம் செய்தார். தாளாளர் சுதாகர் தலைமை வகித்தார். பள்ளி பாடகர் குழுவினர் வாழ்த்துப் பாடல்கள் பாடினர். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார்.
தலைமையாசிரியர் குணசீலராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் தேசிய மாணவர் படை முன்னாள் அலுவலரும், பல்வேறு பள்ளிகளில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற தாமஸ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில், மாணவர்களிடம் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி இருந்தால் வாழ்வில் உயர்ந்த இடத்தை பெறலாம், சிறுவயதில் நன்கு கல்வி கற்க வேண்டும், பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ரத்தினகுமார் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், கல்வி, விளையாட்டு மற்றும் இசையில் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி சிறப்பிடம் வகிப்பதை மாணவர்களுக்கு எடுத்துக் கூறி, கல்வி கற்கும் மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, அரசு பொதுத்தேர்வில் 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசு, நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அனைத்து வகுப்பிலும் கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும், தனித்தனியாக பாடங்களில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்கும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பரிசு வழங்கும் நிகழ்ச்சியை ஆங்கில ஆசிரியை ஐடா தொகுத்து வழங்கினார்.நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம், பழைய மாணவர் சங்கத் தலைவர் ரூபன் துரைசிங், செயலாளர் ஜட்சன், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் ஞானையா, ஓய்வு பெற்ற ஆசிரியர் எட்வின், தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் செல்வின், நாசரேத் தூய யோவான் மாதிரி பள்ளியின் தலைமை ஆசிரியை ஷீலா, மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள், ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியை சாரா ஞானபாய் நன்றி கூறினார்.