• Fri. Apr 19th, 2024

மதுரை பால் சுனை கண்ட சிவபெருமான் திருக்கோயிலில் அன்னபிஷேகம்

Byதரணி

Nov 8, 2022

மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள பால் சுனை கண்ட சிவபெருமான் திருக்கோயிலில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு அன்னபிஷேக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் ஏராமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் அனைத்து ஆலயங்களிலும், குறிப்பாக சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அன்னம் என்பதற்கு உட்கொள்வது, உட்கொள்ளப்படுவது என்று பொருள் உண்டு.
அன்னத்தை தனக்குரியதாக மட்டுமே வைத்துக்கொள்ளும் எவராக இருந்தாலும், அவர்களை விட்டு இறையருள் விலகும் என்பதே வேதங்கள் கூறும் நிதர்சனமான உண்மை. அந்த வேத உண்மையை பறைசாற்றும் விதமாகவே கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு இறைவன் திருமேனியில் வைக்கப்பட்ட அன்னம், பிரசாதமாக பக்தர்களும், நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கும் வழங்கப்படுகிறது.அந்த வகையில் மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலை சார்ந்ததும், திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் அமைந்துள்ளதுமான அருள்மிகு பால் சுனை கண்ட சிவபெருமான் திருக்கோயிலில் ஐப்பசி பௌர்ணமி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.முன்னதாக,பஞ்சலிங்கம் முன்பு புனித நீர் குடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதன் தொடர்ச்சியாக 108 மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, லிங்கத்திற்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.இதனையடுத்து பூஜையில் வைக்கப்பட்டு இருந்த புனித நீர் குடங்கள் மங்கள வாத்தியங்களுடன் சங்கொலி முழங்கிட ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பஞ்சலிங்கதிற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அன்னம் சாத்துபடி செய்து காய்கறிகள் பழங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.அன்னாபிஷேகத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட 108 மூலிகை அபிஷேகத்தில் இருந்து பெறப்பட்ட பிரசாதம் நாள்பட்ட உடல் நோய் உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
ஐப்பசி பௌர்ணமி சிறப்பு பூஜையில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்திட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *