பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நிலையில் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியை அமரீந்தர் சிங் தொடங்கியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைமைக்கு தனது அதிகாரபூர்வ ராஜினாமாவை அனுப்பிய பஞ்சாபின் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் தனது புதிய கட்சியான பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியை தொடங்கியுள்ளார். பஞ்சாப் முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங் காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவையடுத்து கடந்த சில நாட்கள் முன் ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து பஞ்சாபின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவை அவரது வீட்டில் அமரீந்தர் சிங் சந்தித்துப் பேசினார். பின்னர் தனியார் தொலைகாட்சி பேட்டியளித்த அமரீந்தர் சிங் கூறுகையில் ‘‘நான் காங்கிரஸில் தொடர்ந்து இருக்க மாட்டேன். அதேசமயம் பாஜகவில் சேர மாட்டேன்’’என தெரிவித்தார்.
மேலும், கடந்த 30ம் தேதி காங்கிரஸ் கட்சியுடன் இணக்கமான நேரம் என்பது முடிந்துவிட்டது. கட்சியில் இருந்து பிரியும் முடிவு நீண்ட யோசனைக்குப் பிறகு எடுக்கப்பட்டு இறுதியானது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், ஆனால் இனி காங்கிரஸில் இருக்க மாட்டேன், என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமரீந்தர் சிங் தனது 7 பக்க ராஜினாமா கடிதத்தை முறையாக காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்திக்கு அனுப்பிவைத்தார். அதனைத் தொடர்ந்து அமரீந்தர் சிங் தனது புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.
இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், ‘ராஜினாமாவிற்கான காரணங்களை தொகுத்து இணைத்துள்ளார். அப்போது, அவர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எனது ராஜினாமாவை அனுப்பிவைத்துள்ளேன். ராஜினாமாவிற்கான காரணங்களை அதில் காரணங்களை பட்டியலிட்டுள்ளேன். பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளேன். கட்சிக்கான பதிவு அனுமதி நிலுவையில் உள்ளது. கட்சியின் சின்னம் பின்னர் அங்கீகரிக்கப்படும் என அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். பஞ்சாபில் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற சில மாதங்களே உள்ள நிலையில் அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.