கண்ணோடு காண்பதெல்லாம் பாடலை சுதி சுத்தமாக பாடிய பெண்மணியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பல முன்னணி இசையமைப்பாளர்கள் இதுபோன்று தெருக்களில், ரயில்களில், பயணங்களின் போது பாடல் பாடி தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய பல வறிய நிலை மக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி செய்வதற்கு முன் வந்திருக்கின்றனர். அவர்களின் வீடியோக்களை இணையதளங்களில் எடுத்து போட்டு இவர்கள் குறித்த தகவல்கள் இருந்தால் கொடுங்கள், இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம், இவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்வதுண்டு.
சில மாதங்களுக்கு முன்பாக கூட பெங்களூர் தெருக்களில் பூம் பூம் மாட்டுடன் ஒவ்வொரு வீடாக சென்று நாதஸ்வரம் வாசித்த கலைஞர் ஒருவர் பற்றிய வீடியோவை பகிர்ந்த பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இவர் பற்றி விவரங்கள் ஏதேனும் தெரிந்தால் சொல்லவும் என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் குறித்த விவரங்கள் அவருக்கு தெரிவிக்கப்பட்ட பின்னர், குறிப்பிட்ட அந்த நபரை வைத்து ரெக்கார்டிங் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வதாக ஜிவி பிரகாஷ் மீண்டும் தம்முடைய பதிவில் தெரிவித்து இருந்தார்.
இதேபோல் இசையமைப்பாளர் டி.இமான், தாம் இசையமைத்த விஸ்வாசம் படத்தின் கண்ணானே கண்ணே பாடலை பார்வை மாற்றுத்திறனாளி திருமூர்த்தி பாட, அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டானதை அடுத்து திருமூர்த்தியின் திறமையை பாராட்டும் விதமாக அவரை நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் இமான், தான் இசையமைத்த சீறு படத்தில் பாடும் வாய்ப்பையும் திருமூர்த்திக்கு வழங்கினார்.
இதே போன்று இணையதளங்களில் வைரலாக கூடியவர்கள் பலருக்கும், பல முன்னணி இசையமைப்பாளர்கள் பலரும் தங்களுடைய இசை பணிகளில் இணைத்து அவர்களுக்கு தகுந்த வாய்ப்பினை வழங்கி இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது ரயிலில் பாடல் பாடும் பெண் ஒருவரின் வீடியோ கடந்த இரண்டு நாட்களாக இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
யாரென்று தெரியாத இந்த பெண் சுதி சுத்தமாக கண்ணோடு காண்பதெல்லாம் பாடலை பாடுவதாகவும், பாடலுக்கு ஏற்றாற் போல் இவர் போடும் தாளம் வியக்க வைப்பதாகவும் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து, இணையதளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் இவர் போன்ற திறமை மிக்கவர்களுக்கு வாய்ப்பு வழங்க கூடியவர்கள் உதவினால் இவருடைய வாழ்க்கையே மாறும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
வட மாநிலத்தைச் சேர்ந்த ரெனு மோண்டல் என்கிற பெண்மணி இதே போன்று இணையதளம் வழியாக பாடியவர்தான். அவருக்கு பிற்காலத்தில் பல பாடல் பாடும் வாய்ப்புகள் வந்து சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.