• Sat. Apr 20th, 2024

டாக்டர், நர்சுகளை கண்காணிக்க பறக்கும்படை ஐகோர்ட் உத்தரவு..!

ByA.Tamilselvan

Nov 17, 2022

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்சுகள் சரியான நேரத்தில் பணிக்கு வருகின்றனரா என்பதை கண்காணிக்க பறக்கும்படை அமைக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள் காலாவதியானதால், அந்த மருத்துவமனையின் மருந்து காப்பக பொறுப்பாளர் முத்துமாலை ராணி என்பவருக்கு பணி ஓய்வு பலன்கள் வழங்க அரசு மறுத்து விட்டது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், காலாவதியான மருந்துகள் அரசு மருத்துவமனையில் விநியோகம் செய்யப்படுகிறதா..?. அரசு மருத்துவமனைகளில் இருந்து விலை உயர்ந்த மருந்து கடத்தப்படுகிறதா..?. புதுப்புது நோய்கள் பரவ என்ன காரணம்..? என்று சரமாரியாக கேள்விகளை கேட்டு, அதற்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். நீதிபதியின் கேள்விகளுக்கு தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார். அதில், முத்துமாலை ராணி மீதான நடவடிக்கைகளை ரத்து செய்கிறேன். அவருக்கு எதிரான புகார் குறித்து புதிதாக விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணைக்கு மனுதாரர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்சுகள் சரியான நேரத்தில் பணிக்கு வருகின்றனரா, நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா..? என்பது குறித்து சோதனை நடத்துவதற்காக மண்டல மற்றும் மாவட்ட அளவில் பறக்கும் படைகளை தமிழக அரசு அமைக்க வேண்டும். இந்த பறக்கும் படைகள் முறையாக செயல்படுகிறதா என்பதை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *