தமிழக அரசின் 2022-2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
சரியாக இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட்டை அமைச்சர் தாக்கல் செய்தார். அமைச்சர் பேசத் தொடங்கியதும் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். பேரவையில் பேச அனுமதி அளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார்.
மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது, வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்தையதை கண்டித்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சரின் பட்ஜெட் உரை முடிந்ததும் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என சபாநாயகர் உறுதி அளித்தபோதும், அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, அதிமுகவினர் கருத்துகள் எதுவும் அவைக்குறிப்பில் சேர்க்கப்படாது என சபாநாயகர் தெரிவித்தார். பட்ஜெட் உரையை கேட்குமாறும் அவர் கோரிக்கை வைத்தார்.
எனினும் ஏற்காத அதிமுக எம்எல்ஏக்கள் பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தொடர்பான உரையை வாசித்து வருகிறார். சில நிமிடங்களில் பல புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.
இந்தாண்டும் காகிதம் இல்லாத பட்ஜெட்டாக இந்த வரவு-செலவு திட்டம் வாசிக்கப்பட இருக்கின்றது. தொடுதிரை உதவியோடு கணினி முறையில் ஏற்கனவே கடந்த ஆண்டு வரவு-செலவு திட்டம் தாக்கல் செய்ததுபோன்று, இந்த ஆண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.
கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு
புதிய தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படுவதன் மூலம் ரூ.50,000 கோடி முதலீடு ஈர்க்கப்படும்; செய்யாறு & கும்மிடிப்பூண்டியில் சரக்கு வாகன மையம் அமைக்கப்படும்
நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை மேம்பாட்டிற்கு ரூ.18,218 கோடி ஒதுக்கீடு; நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.20,400 கோடி ஒதுக்கீடு
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது
தமிழ்நாட்டில் இருந்து உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களையும் ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களையும் உருவாக்க தமிழ்நாடு ஒலிம்பிக் தங்க பதக்க தேடல் திட்டம் உருவாக்கப்படும்
நீர்வளத் துறைக்கு ரூ.7,338.36 கோடி ஒதுக்கீடு; கடந்தாண்டை காட்டிலும் ரூ.4296.35 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு.
நகர்ப்புறப் பகுதிகளைப் பசுமையாக்கி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு 500 பூங்காக்கள் உருவாக்கப்படும்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.17,901.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
புலம்பெயர் தொழிலாளர்கள் தேவை அதிகரித்து வருகிறது; அரசு நலத்திட்ட பயன்கள் அவர்களை சென்று சேர நடமாடும் தகவல் உதவி மையங்கள் அமைக்கப்படும்
மின்சார வாரியத்துக்கு ஏற்படும் இழப்பை அரசே ஏற்கும்; இதற்காக ரூ.13,108 கோடி நிதி ஒதுக்கீடு.
இதுவரை 75,765 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன; எஞ்சிய இணைப்புகளும் விரைவில் வழங்கப்படும்
அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மானியமாக ரூ.1300 கோடி வழங்கப்படும்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை 6 வழிச் சாலையாக அகலப்படுத்தப்படும்.
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.1,000 கோடியும்,சிங்கார சென்னை திட்டத்திற்கு ரூ.500 கோடியும் ஒதுக்கீடு; துறைமுக நகரங்கள் திட்டத்துக்கு 1,825 கோடி ஒதுக்கீடு.
கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புக்காக ரூ.450 கோடி ஒதுக்கீடு; மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.838.01 கோடி ஒதுக்கீடு.
அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து, உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
காவல்துறைக்கு ரூ.10,285 கோடி நிதி ஒதுக்கீடு; ரூ.125 கோடி செலவில் புதிய நூலகங்கள்.