• Fri. Apr 19th, 2024

ஒற்றை தலைமை நோக்கி அதிமுக…தேனியில் அஸ்திவாரம் போடும் ஓபிஎஸ்

தேனியில் உள்ள பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் மீண்டும் சசிகலாவை இணைப்பதற்கான அஸ்திவாரத்தை தேனியில் இருந்து துவங்கி உள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தல் , அதனை தொடர்ந்து நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கடும் சரிவை சந்தித்தது. அதனை தொடர்ந்து அதிமுகவில் அவ்வப்போது சிறு சலசலப்பு ஏற்பட்டது. பெயருக்கு தான் இரட்டை தலைமை ஆனால் எந்த ஒரு விஷயத்திலும் கலந்து ஆலோசிக்க அழைப்பதில்லை.முடிவு எடுத்த பிறகு தான் தன்னிடம் அறிவிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கடும் அதிருப்தியில் இருந்தார்.
ராஜேந்திர பாலாஜி கைது செய்யபட்ட போது அதிமுக தலைமை அமைதியாக இருந்தது, ஜெயிலில் இருந்து ராஜேந்திர பாலாஜி வந்த பிறகு கூட அதிமுக தலைமை சந்திக்க மறுத்தது. ஜெயக்குமார் கைது நடவடிக்கை என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி கொண்டே செல்லலாம். சமீபத்தில் கூட புழல் சிறையில் உள்ள ஜெயக்குமாரை எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க சென்ற போது கூட ஓ.பன்னீர் செல்வத்தை அழைத்து செல்லவில்லை. அவர் தனியாக சென்று தான் ஜெயக்குமாரை சந்தித்தார்.
மேலும் அதிமுகவில் தலைமை சரி இல்லை என்று அவ்வப்போது சசிகலாவும் அறிக்கைகள் வெளியிட்டுக்கொண்டிருந்தார். மேலும் அதிமுக கொடி பொருத்திய காரில் வலம்வருவது, அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் அறிக்கைகள் வெளியிடுவது என்று அதிரடி இல்லை என்றாலும் அதிமுக தலைமையை அதிர வைக்கும் விதமாக இருந்தது.
சட்டமன்றத்தில் கூட எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்ற பதவி ஓ.பி.எஸ்க்கு கொடுக்க காரணம் எங்கு நமக்கு எதிராக படையை திரட்டி விடுவாரோ என்ற பயத்தில் எடப்பாடி கொடுத்துள்ளார்.ஆனால் எடப்பாடியும் கட்சியை கவனிப்பதில் அவ்வளவு ஈடுபாடு காட்டவில்லை. ஒருபுறம் திமுக அடிக்க மறுபுறம் பால் ஊற்றி வளர்த்த பாஜக அடிக்க என்ன செய்யவதென்று புரியாமல் இருந்த போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளின் போது சசிகலா ஒற்றுமையுடன் இருந்தால் தான் வெல்ல முடியும் என்று ஒரு ரகசிய தூது அதிமுகவிற்கு அனுப்பினார்.அது யாருக்கு புரிந்ததோ இல்லையோ ஓ.பன்னீர்செல்வம் புரிந்த காரணத்தால் தான் இன்று அதிரடி நடவடிக்கையாக சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என்று தனது ஆதரவாளர்களுடன் தேனியில் ஒரு ரகசிய கூட்டத்தை போட்டு தீர்மானத்தையும் நிறைவேற்றி உள்ளார்.
இந்த ரகசிய கூட்டத்தில் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்த சாதக பாதகங்கள் விவாதிக்கப்பட்டு பிறகு ஒரு மனதாக தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர். தேர்தல் வெற்றி தோல்வி குறித்து எங்கும் எதுவும் பேசாமல் இருந்து வந்த ஓபிஎஸ் அதிமுகவில் போர்க்கொடி தூக்கி பாஜகவுடன் இணைந்து அதிமுகவை தன்வசபடுத்துவார் என்று நினைத்த நிலையில் தற்போது இப்படி ஒரு அதிரடியை தனது சொந்த மாவட்டத்தில் இருந்து தொடங்கி உள்ளார்.
மேலும் அடுத்த நடவடிக்கையாக வரும் 5 ம் தேதி தனது ஆதரவாளர்கள் 20 ஆயிரம் பேரை சசிகலாவை கட்சியில் இணைப்பதற்கு ஆதரவாக பிரம்மாண்ட கூட்டம் ஒன்றை நடத்தி அதில் கையெழுத்து வாங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
எந்த தேனியை தக்கவைத்து கொள்ள முடியவில்லை என்று ஏளனம் செய்தார்களோ அந்த தேனியை மீண்டும் தனது கோட்டையாக மாற்ற இந்த முறை இப்படி ஒரு திட்டத்தை ஓ.பன்னீர் செல்வம் கையில் எடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *