திமுக அரசின் கள்ளச்சாராய மரணங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து ஆளுநரிடம் புகார் அளிக்க எதிர்கட்சிதலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், சென்னை சைதாப்பேட்டையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றதால், சென்னை மாநகரின் முக்கிய சாலைகள் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து நின்றது.
தமிழகத்தில் தொடர் கொலை மற்றும் கொலை சம்பவங்கள் நடைபெறுவதாக எதிர்கட்சிகளான அதிமுக, பாஜக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. தமிழகத்தில சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாகவும், கடந்த 20 நாட்களில் சென்னையில் 18 கொலைகள் நடைபெற்றுள்ளதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மேலும் கொள்ளை சம்பவங்களும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் நிலவுவதாக கூறியிருந்தார். இந்தநிலையில் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 23 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதனையடுத்து எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்ததையடுத்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இந்த தேடுதல் வேட்டையில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான லிட்டர் கள்ளச்சாரயம் அழிக்கப்பட்டது. இதனையடுத்து கள்ளச்சாராய மரணம் தொடர்பாக பாஜக சார்பாக நேற்று தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து அண்ணாமலை புகார் அளித்திருந்தார். அப்போது அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்தநிலையில் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும், கள்ளச்சாராய மரணம் தொடர்பாகவும் ஆளுநரிடம் புகார் அளிக்க அதிமுக திட்டமிட்டது. இதனையடுத்து சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் இருந்து பேரணியாக சென்று ஆளுநரை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமயில் பேரணியானது இன்று காலை நடைபெற்றது. இந்த பேரணியின் காரணமாக அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் கடந்த செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றது. குறிப்பாக வேளச்சேரி, கிண்டி, அடையாறு, சைதாப்பேட்டை போன்ற பகுதிகளில் வாகன நெரிசல் அதிகளவு காணப்பட்டது. பணிக்கு செல்வபவர்களும், விமான நிலையத்திற்கு செல்பவர்களும் உரிய நேரத்தில் தங்களது இடங்களை அடைய முடியாமல் தவித்தனர். மேலும் அந்த பகுதிக்கு வந்த ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறியது.