• Fri. Mar 29th, 2024

அதிமுகவில் தலைமையே இல்லை.. சசிகலாவிற்கு செல்லூரார் ரகசிய தூது

அதிமுக-வில் தலைமையே கிடையாது என‌ முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருந்த நிலையில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட உறுதி ஏற்போம் என்று சசிகலா கூறியுள்ளார்.

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் ஒன்றைக் கூட அதிமுக கைப்பற்றவில்லை.
மேலும் பல மாவட்டங்களில் முழுவதுமாக வாஷ்-அவுட் ஆனது அதிமுக. இதனால் அதிமுக தொண்டர்கள் மிகப்பெரிய அதிருப்தியில் இருக்கின்றனர்.

அதிமுக இந்த தேர்தலை தனியாக எதிர்கொண்டது. இந்த தோல்வி எதிர்பார்த்தது தான் என அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் முதலிடத்தில் இருக்கும் திமுகவுக்கும், இரண்டாம் இடத்தில் இருக்கும் அதிமுகவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ”அதிமுகவில் தற்போது தலைமையே இல்லை. இப்போது இருப்பவர்களை கட்சியை வழிநடத்தவே நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம். அதிமுக திமுகவில் சங்கமமாகிவிடும் என ஐ.பெரியசாமி கூறுவது ஏற்கத்தக்கதல்ல. அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து பேசி முடிவு எடுப்போம். அதிமுகவின் வாக்கு வங்கி குறையவில்லை; வாக்களிக்க வேண்டிய மக்கள் வாக்களிக்க வரவில்லை.

தமிழகத்தில் என்றுமே திமுக, அதிமுக தான் ஆட்சி செய்யும்; மாற்று கட்சியினர் யாராலும் ஆள முடியாது. பாஜக வளரும் கட்சி என்பதால் 3வது பெரியகட்சி என அண்ணாமலை சொல்கிறார். நடந்து முடிந்த தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக தன்னுடைய பணபலத்தால் வெற்றியை பெற்றுள்ளது” என்றார்.

இந்நிலையில், சென்னை ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பேசிய சசிகலா கலந்துகொண்டார். அப்போது, ”50 ஆண்டு கால வரலாற்றில் அதிமுக தொடர் தோல்வியை கண்டதில்லை. இதை மனதில் எண்ணி பார்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட உறுதி ஏற்போம்” என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. பல இடங்களில் டெபாசிட் கூட அதிமுக வேட்பாளர்கள் பெறவில்லை. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் திமுகவில் இணைந்தனர். அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது அதிமுக. அதிமுகவுக்கு சரியான தலைமை இல்லாததால் தான் இந்தத் தோல்வி என்று விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், அதிமுகவுக்கு தலைமை இல்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார். செல்லூர் ராஜூ கூறியதற்கு சசிகலா சூசகமாக பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *