நகர்புற உள்ளாட்சி தேர்தலன்று(19ம் தேதி) கள்ள ஓட்டு போட வந்ததாக கூறி திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கிய வழக்கில் 21 ம் தேதி இரவு கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்வதற்காக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையானது இன்று காலை 10.30 மணியளவில் அளவில் ஜி.டி கோர்ட் 15 வது நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட் முரளிகிருஷ்ணா ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.
ஜெயக்குமாரின் மகனும், முன்னாள் எம்பியுமான ஜெயவர்தன், பெஞ்சமின், செங்கோட்டையன், வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், உடுமலை ராதாகிருஷ்ணன், மனோஜ்பாண்டின் பாலகங்கா, கே.பி.கந்தன், கோகுல இந்திரா, விருகை ரவி, ஆதிராஜராம் போன்ற அதிமுக நிர்வாகிகளும் 500 க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களும் நீதிமன்ற வளாகத்தில் குவிந்தனர்.
பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை நாற்காலியில் அமரவைத்து வழக்கு விசாரணையை தொடங்கினார் மேஜிஸ்ட்ரேட் முரளி கிருஷ்ணா ஆனந்த். அப்போது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கள்ள ஒட்டு போட்ட நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். வேறு எந்த தவறும் அவர் செய்யவில்லை எனவும் போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்கும் அளவுக்கு இந்த வழக்கு உகந்தது இல்லையென்றும் தேவைப்பட்டால் சிறைக்குள் சென்று போலீஸ் விசாரிக்கட்டும் என்று ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர் தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.
அதற்கு, ஜெயக்குமார் பதிவிட்ட வீடியோ குறித்து ஆய்வு செய்து விசாரிக்க வேண்டும் எனவும் சிசிடிவி காட்சிகள் வைத்தும் விசாரிக்க வேண்டும் எனவும் காவல்துறை தனது தரப்பு வாதங்களை முன்வைத்தது. காலை 11 மணிக்கு ஆரம்பித்த விசாரணையானது மதிய உணவு இடைவெளிக்கு பின் ஒத்திவைக்கப்பட்டது. பின் வழக்கை விசாரணை செய்த மேஜிஸ்ட்ரேட் காவல்துறையின் போலீஸ் கஸ்டடி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
முன்னதாக நேற்று முந்தினம் திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் ஜாமின் பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையானது GT கோர்ட் 16 வது நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட் தயாளன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த மேஜிஸ்ட்ரேட் தயாளன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இதனால் ஜெயகுமார் தரப்பு வழக்கறிஞர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் ஜாமின் விசாரணையானது தற்போது முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.