

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
அதிமுக. பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதியிடம் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. அதற்கு வழக்கை விசாரித்து வந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.பன்னீர்செல்வத்தின் செயல் நீதித்துறையை களங்கப்படுத்துவது போல் இருப்பதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கூறினார். இதையடுத்து தலைமை நீதிபதியிடம் முறையிட்டதற்கு, ஓபிஎஸ் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து முடிவு செய்ய தலைமை நீதிபதிக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரை செய்தார்.
பரிந்துரையை பரிசீலித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிக்க உத்தரவிட்டார். இந்த வழக்கை 2 வாரத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வருகிறது. இதனால் தற்போது இந்த வழக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
