

நடிகர் அருண் விஜய் நடிப்பில் பார்டர், சினம் மற்றும் அவரது மைத்துனர் ஹரி இயக்கத்தில் அவர் நடித்துள்ள யானை உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்த ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதனிடையே அவர் அடுத்ததாக நடித்துவரும் அக்னி சிறகுகள் படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 2013ல் வெளியான மூடர்கூடம் என்ற சிறப்பான படத்தை எழுதி இயக்கி நடித்த நவீன் இயக்கத்தில் தற்போது அருண் விஜய் அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார். இவருடன் இந்தப் படத்தில் விஜய் ஆன்டணியும் நடித்து வருகிறார்.
படத்தில் அக்ஷரா ஹாசன், பிரகாஷ்ராஜ், நாசர், ரெய்மா சென், சென்ட்ராயன், சதீஷ்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகரில் எடுக்கப்பட்ட சேசிங் காட்சிகள் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகாமல் இருந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட சிஜி வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் படத்தின் ட்ரெயிலர் வெளியாக உள்ளதாகவும் இயக்குநர் நவீன் தற்போது அப்டேட் தெரிவித்துள்ளார்.