• Sat. Apr 20th, 2024

மீண்டும் ஒரு சாதனையில், ‘ஒத்த செருப்பு’!

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் பார்த்திபன். இவர் நடித்த “ஒத்த செருப்பு சைஸ் 7” இந்தோனேஷிய பஹாசா மொழியில் உருவாகும் முதல் தமிழ் படம் எனும் பெருமையை பெற்றுள்ளது.

ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் அற்புதமான முயற்சியில் உருவான படைப்பு ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. இப்படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு முன்னோடியாக மாறியுள்ளது. இந்திய மற்றும் உலகளாவிய தளங்களில் உள்ள ஒவ்வொரு பார்வையாளர்களின் இதயங்களை கவர்ந்தது முதல், அகாடமி விருதுகள் மற்றும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களின் நடுவர்களின் கவனத்தை ஈர்த்தது வரை, பல சாதனைகள் படைத்த இந்த தலைசிறந்த படைப்பு, தமிழ் சினிமாவின் களத்தை மேலும் விரிவுபடுத்தி வருகிறது.

‘ஒத்த செருப்பு சைஸ் 7’ அதிகாரப்பூர்வமாக இந்தோனேசிய பஹாசா மொழியில் ரீமேக் செய்யப்படுகிறது, இதை PT ஃபால்கன் நவீன் தயாரிக்கிறார். இந்தோனேசியாவில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ்த் திரைப்படம் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது!

இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், அமிதாப் பச்சன் தயாரிப்பில், அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பை தற்போது முடித்துள்ளார். தவிர, அவர் தற்போது தனது லட்சியத் திரைப்படமான ‘இரவின் நிழல்’ படத்தில் பணிபுரிந்து வருகிறார், இது ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் படமாக உலக கவனத்தை ஈர்க்கவுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு அகாடமி விருதுபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குவதோடு, படத்தில் மூன்று பாடல்களையும் எழுதியுள்ளார் இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள இயக்குநர் பார்த்திபன் தனக்கே உரிய ஸ்டைலில், இதுகுறித்த பன்ச் கவிதை ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

“நண்பகல்
வெண்பொங்கல்
வியாபாரம்
சூடுபுடிக்குதாம்!”

என பதிவிட்டு இருக்கும் பார்த்திபனின் மன வேதனையை புரிந்து கொள்ள முடிவதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். ஏனெனில், இந்த படம் திரையரங்குகளில் வெளியான போது இதை வாங்கி திரையிட பல திரையரங்குகள் முனைப்பு காட்டவில்லை என்றும், எதிர்பார்த்த வசூல் வரவில்லை என்றும் கூறியிருந்தார் பார்த்திபன்.

இதுபோன்ற நல்ல படைப்புகளுக்கு வெறும் பாராட்டுக்கள் மட்டும் கிடைத்தால் எப்படி கமர்ஷியல் படங்களை திரையில் திருவிழா போல கண்டு ரசிக்கும் ரசிகர்கள் இப்படிப்பட்ட படைப்புகளையும் பெருமளவில் பார்த்து ரசித்தால் தானே லாபம் கிடைக்கும். அப்போது தானே தொடர்ந்து இதுபோன்ற வித்தியாசமான முயற்சியில் இயக்குநர்கள் களம் இறங்குவார்கள் என்கிற தனது நிஜ வேதனையையும் பார்த்திபன் பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *