• Sat. Sep 23rd, 2023

சமூக ஊடகங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கும் மத்திய அரசு

மக்களவையும், மாநிலங்களவையும் இணைந்து ஒருமித்த கருத்தை முன்னேடுத்தால், சமூக ஊடகங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசு தயாராக இருப்பதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

அந்க கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், இது ஒருமுறை நடத்தப்படும் கூட்டம் அல்ல. குறைந்தப்பட்சம் காலாண்டிற்கு ஒரு முறை நடத்தப்படும். இல்லையெனில், ஊடகங்களில் பகிரப்படும் தவறான கன்டன்ட்களை நீக்கும் செயல்பாட்டில் உள்ள முன்னேற்றங்கள் குறித்து அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றனர்.

நாடாளுமன்றத்தில் பேசிய வைஷ்ணவ், ‘நம் நாட்டு குடிமக்களின் பாதுகாப்பிற்காக, விதிகளை கடுமையாக்க வேண்டும் என தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். இந்த நேரத்தில், நாங்கள் அரசியலமைப்பு கட்டமைப்பு குறித்து பணியாற்றி வருகிறோம்.

இவ்விவகாரத்தில் மத்திய அரசு, மாநில அரசு இரண்டு தரப்பின் கண்ணோட்டத்தையும் பார்க்க வேண்டும். நாம் ஒரு சமூகமாக முன்வந்து, சமூக ஊடகங்களுக்கு அதிக பொறுப்புணர்வை உருவாக்க வேண்டும்’ என்றார்.

முஸ்லீம் பெண்களின் அவதூறான புகைப்படங்களை வைத்து ஏலம் விட முயன்ற தளங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பாஜகவின் சுஷில் குமார் மோடி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த வைஷ்ணவ், ஆன்லைனில் பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பது ஒரு அடிப்படைக் கட்டமைப்பாகும்.அதில் எந்த சமரசமும் கிடையாது. இது எங்கள் கடமையாகும்.தகவல் கிடைத்ததும், உடனடியாக நடவடிக்கை எடுத்தோம்’ என்றார்.

மேலும், சமூக ஊடகங்களை சீர்செய்யும் நடவடிக்கைகளை எடுக்கும் போது, பேச்சு சுதந்திரம் பறிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருவதாக தெரிவித்தார்.

ஐபியுடனான கூட்டம் குறித்து பேசிய சமூக ஊடக நிர்வாகி ஒருவர், ‘ ஐபி அமைச்சகம் தற்போது ஒரு செயல்முறையை கொண்டுள்ளது. அவர்கள் சர்ச்சைக்குள்ளான பதிவு என கருதுவதை, எங்களுக்கு தெரிவிக்கிறார்கள்.

நாங்கள் அந்த பதிவின் கன்டன்டை, உள் மதிப்பாய்வு செய்து, அந்த பதிவை நீக்குவோம் அல்லது பதிவை நீக்காதது ஏன் என்பது குறித்து தகவல் தொடர்புநுட்ப துறை அமைச்சகத்திற்கு நேரில் சென்று விளக்குவோம்’ என்றார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகளின் கூற்றுப்படி, I&B அமைச்சகம் சமூக ஊடகத்தில் உலாவும் போலிச் செய்திகள், இந்தியாவுக்கு எதிரான உள்ளடக்கம், ஆபாச மற்றும் பிற சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களைத் எப்படி கையாள்கின்றனர் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்தகைய உள்ளடக்கத்தை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒவ்வொரு மாதமும் நடவடிக்கையின் ரிப்போர்டை அறியவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சமூக ஊடக தளங்களில் அகற்றுவதற்கான சர்ச்சையான பதிவுகளை சுட்டிக்காட்டினர்.

தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், 73 ட்விட்டர் கணக்கு, நான்கு யூடியூப் சேனல்கள் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஒரு கேம் ஆகியவை போலியான மற்றும் வன்முறை தூண்டு கன்டன்ட்களை உள்ளடக்கத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்தந்த சமூக ஊடக நிறுவனங்கள் அதனை நீக்கம் செய்யும்படி கேட்டுக் கொண்டது.

அதேபோல், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் 35 யூடியூப் சேனல்களை முடக்க உத்தரவிட்டுள்ளது. இந்த சேனல்களின் உண்மையான உரிமையாளர்கள் பாகிஸ்தான் இருப்பதாகவும், டிஜிட்டல் மீடியாவில் இந்தியாவுக்கு எதிரான போலிச் செய்திகளை பரப்புவதில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்ப்டடுள்ளது.

முன்னதாக, பிப்ரவரி 2021இல், சமூக ஊடகங்கள் மற்றும் ஓடிடி தளங்களில் பகிரப்படும் போலி செய்திகள் மற்றும் அவதூறு கருத்துகளை தடுக்கும் வகையில், புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 31 அன்று, டெல்லியின் எல்லையில் நடந்துகொண்டிருந்த விவசாயிகள் போராட்டங்களுக்கு மத்தியில், ஐடி அமைச்சகம் 257 ட்விட்டர் கணக்குகளை முடக்க உத்தரவிட்டிருந்தது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69வது பிரிவின் கீழ் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தனது அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தியது.

ஆரம்பத்தில் அரசின் உத்தரவுக்கு செவிசாய்த்த ட்விட்டர் நிறுவனம், தளத்தின் பேச்சு சுதந்திரத்தை சுட்டிக்காட்டி, சில கணக்குகளை முடக்க முடியாது என தெரிவித்தது. இந்த நடவடிக்கை, தகவல் தொழில்நுட்ப துறை அமைசசகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed