• Mon. Mar 24th, 2025

சிபிசிஎல் நிறுவனத்தை எதிர்த்து நடை பெற்ற போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு:

ByR. Vijay

Feb 28, 2025
நாகை அருகே சிபிசிஎல் நிறுவனத்திற்கு இடம் வழங்கியவர்களுக்கான மறுவாழ்வு மீள் குடியமர்வு தொகை வழங்காததை கண்டித்து, இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெற்று, விவசாயிகள் ஆட்சியரின் உறுதியை ஏற்று போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த பனங்குடி கிராமத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்திற்காக ஒன்றிய அரசு 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதன் விரிவாக்க பணியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

570 விவசாயிகளிடம் 620 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்கினாலும் நில உரிமையாளர்கள், சாகுபடிதாரர்கள், விவசாய கூலிகளுக்கு மறுவாழ்வு மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகை 5 லட்சம் தமிழக அரசு வழங்கவில்லை.

இந்த நிலையில் காலதாமதம் செய்த தமிழக அரசு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து இரண்டாவது நாளாக நரிமணம், பனங்குடி, கோபுராஜபுரம் ஆகிய 3 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பனங்குடி கிராமத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆகாஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என ஆட்சியர் அளித்த உறுதியை அளித்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.