புலி அமைதியாக இருக்கும்போது திடீரென ஆடு வந்து சம்பந்தம் இல்லாமல் பேசுகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் பொதுக்குழுக் கூட்டம் தலைவர் நடிகர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இக்கூடடத்தில் அக்கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசினார். திமுகவையும், அண்ணாமலையையும் குறிவைத்து அவர் விமர்சனம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், “தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்தவுடன் தவெகவுக்கு எதிராக திமுக பெரிய கட்டமைப்பை உருவாக்கினார்கள். அதன் ஒரு பகுதியாக திமுகவின் ‘பென்’ நிறுவனமானது ஐபேக் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளனர். அதன் அதிகாரி ரிஷி முழுக்க முழுக்க பாஜகவுக்காக செயல்பட்டவர். இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் எங்களுக்கும் அரசியல் தெரியும்.
எம்ஜிஆரும் 20 ஆண்டுக்கு மேலாக திமுகவில் வேலை பார்த்தார். உண்மை தெரிந்துவிட்டது வெளியே வந்துவிட்டார். திமுகவில் இருக்கும்போது அண்ணாவின் கொள்கையை நிறைவேற்ற முடியவில்லை. ஜெயித்த பிறகு அண்ணாவின் குறிக்கோளை நிறைவேற்றினார். இன்று பெரியார், அண்ணாவின் குறிக்கோளை நிறைவேற்றக்கூடிய ஒரே தலைவர் எங்கள் தலைவர்.
எதிர்க்கட்சிகளை எப்படி உடைக்க வேண்டும், எதிர்க்கட்சி தலைவர்களை எப்படி விலைக்கு வாங்குவது, தவெகவுக்கு எதிராக எப்படி பொய்ப் பிரசாரம் செய்ய வேண்டும் என்று திமுக திட்டமிட்டு வருகிறது. அதற்காக அண்ணாமலையை செட் செய்து திமுக வைத்துள்ளது. டெல்லியில் இருந்து கொண்டு மோடி மற்ற மாநிலங்களை செட் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் இங்கு இவர்கள் அண்ணாமலையை வைத்து செட் செய்துகொண்டிருக்கிறார்கள். திமுகவும் பாஜகவும் எதிரிகள் போன்று நாடகமாடுகிறார்கள். முசோலினியும் ஹிட்லரும் சேர்ந்துகொண்டு அரசியலை உருவாக்கி வருகிறார்கள்
அதாவது புலி அமைதியாக இருக்கும்போது திடீரென ஆடு வந்து சம்பந்தம் இல்லாமல் பேசுகிறது. பெண்ணைக் கேவலமாக பேசக்கூடிய தலைவரை வைத்திருந்தால் அந்த கட்சி எந்தளவுக்கு இருக்கும் என்பது முடிவாகிவிட்டது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் நாமெல்லாம் யார் அந்த சார்? எங்கே அந்த சார் என்று கேட்டுக்கொண்டிருக்கும் போது அண்ணாமலை, சாட்டையால் அடித்துக்கொண்டிருக்கிறார். யாருக்காக இந்த அரசியல் செய்கிறார்? எங்கள் கட்சியையும், தலைவரையும் தொட்டால் உங்கள் உண்மை முகத்தை மக்கள் மத்தியில் வெளிகாட்டுவோம் ” என்றார்