

பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள மறுத்து விட்டதாக காங்கிரஸ் எம்எல்ஏ ரவி கனிகா கூறியுள்ள குற்றச்சாட்டை நடிகை ராஷ்மிகா மந்தனா மறுத்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்டி’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகை ராஷ்மிகா மந்தனா அறிமுகமானார். 2018-ம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்தது. அடுத்து மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ படத்தில் நடித்தார்.2021-ல் வெளியான கார்த்தியின் ‘சுல்தான்’ திரைப்படம் ராஷ்மிகாவுக்கு தமிழ் சினிமாவில் அறிமுகத்தை கொடுத்தது. அடுத்து அல்லு அர்ஜூன் உடன் இணைந்து ‘புஷ்பா’ படத்தில் நடித்து இந்திய அளவில் ராஷ்மிகா கவனம் பெற்றார். நடிகர் விஜய்யுடன் ‘வாரிசு’ படத்தில் நடித்த ராஷ்மிகா இந்தியில் ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்த ‘அனிமல்’ வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா கர்நாடகாவைச் சேர்ந்தவர். இவர் பெங்களூருவில் கடந்த ஆண்டு நடைபெற்ற கர்வதேச திரைப்பட விழாவிற்கு வர மறுத்து விட்டதாக காங்கிரஸ் எம்எல்ஏ ரவி கனிகா குற்றம் சாட்டியிருந்தார்.
அப்போது அவர் கூறுகையில், எனது வீடு ஹைதராபாத்தில் உள்ளதாகவும், கர்நாடகா எங்கிருக்கிறது என தெரியாது என்று ராஷ்மிகா கூறியதாகவும் தெரிவித்துள்ள அவர், கன்னட திரைப்படத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினாலும், கர்நாடகாவையும் கன்னட மொழியையும் புறக்கணித்த ராஷ்மிகாவுக்கு பாடம் புகட்ட வேண்டாமா? என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ஆனால், இந்த குற்றச்சாட்டை நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளார். தன்னை யாரும் படவிழாவிற்கு அழைக்கவில்லை என்றும், எம்எல்ஏ ரவி கனிகா கூறிய அனைத்தும் பொய்யானவை என்றும் ராஷ்மிகா மந்தனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

