• Sat. Apr 20th, 2024

அயல்நாட்டு மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி ஆரம்பிக்க நடவடிக்கை…. ஓபிஎஸ் கோரிக்கை ..

ByA.Tamilselvan

Oct 1, 2022

.அயல்நாட்டு மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ….:- தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்படி அயல்நாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான பயிற்சிகால உதவித்தொகை குறித்த விவரங்களை அனுப்புமாறு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களும் மருத்துவக் கல்லூரி இயக்ககத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் இது தொடர்பாக விரிவான பேட்டி ஒன்றினை 29-07-2022 அன்று அளித்திருந்தார்கள். இந்தப் பேட்டி அளித்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், இந்தக் கோப்பிற்கான ஒப்புதல் இன்னும் அளிக்கப்படவில்லை என்றும், இதற்கான கோப்பு நிதித்துறையில் நிலுவையில் உள்ளதாகவும், பிற மாநிலங்களில் உள்ள அயல்நாட்டு மருத்துவ மாணவர்கள் எல்லாம் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் மேற்படி பயிற்சி கால தாமதப்படுத்தப்படுவது தங்களுக்கு மன வருத்தத்தை அளிப்பதாகவும் மாணவ, மாணவியர் தெரிவிக்கின்றனர். .
மேற்படி பயிற்சி உடனடியாக துவங்கப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு அயல்நாட்டு மருத்துவ மாணவ, மாணவியரிடையே இருக்கிறது. தற்போது ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுவிட்டு, இரண்டு ஆண்டு பயிற்சிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அயல் நாடுகளில் மருத்துவம் பயின்று பயிற்சிக்காக காத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் ஏழை எளிய, தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர்கள் என்பதையும், அவர்களின் மருத்துவப் படிப்பு ஏற்கெனவே காலதாமதமாகி இருப்பதையும் கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, நிதித் துறையில் நிலுவையில் உள்ள கோப்பிற்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அவர்களுக்கான மருத்துவப் பயிற்சியை உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *