
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த திருப்பதி மகன் பிரவீன்குமார் (வயது 35) என்பவர் கேரளா மாநிலம் திருச்சூரில் இருந்து லாரியில் ஓடுகள் ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எரம நாயக்கன்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது அதிகாலை நேரம் என்பதால் சாலையின் நடுவே இருந்த தடுப்பில் இருந்த எச்சரிக்கை விளக்கு எரியாததால் லாரி சாலையில் இருந்த சென்டர் மீடியனில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் முன்பக்க டயர்கள் சேதமடைந்து ஆயில் சாலையில் வழிந்தோடியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் காயங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திண்டுக்கல் முதல் கொட்டாம்பட்டி வரை உள்ள 52 கிலோமீட்டர் தூரத்தில் கோபால்பட்டி எரமநாயக்கன்பட்டி மெய்யம்பட்டி ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று சாலை தடுப்புகளில் இதுவரை 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கி சேதம் அடைந்து உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுபோன்று அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளில் உள்ள சாலை தடுப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
