பெட்ரோகெமிக்கல் மண்டலம் அமைப்பதற்கான ஆய்வு அறிக்கை தயாரிக்க கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளி திரும்பப் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் பெட்ரோகெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்ட அறிக்கைக்கு ஒப்பந்தப்புள்ளிக் கோரி கடந்த மாதம் 22ஆம் தேதி நாளேடுகளில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதற்கு விவசாயிகள் மற்றும் சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. நாளை நாகை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில், ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை திரும்பப்பெறுவதாக தற்போது திருத்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களால் பெட்ரோகெமிக்கல் மண்டல திட்ட அறிக்கைக்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் அறிவிப்பு திரும்ப பெறப்படுவதாகவும், பெட்ரோகெமிக்கல் மண்டலம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுவதாகவும் தமிழக அரசின் திருத்த விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.