திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே இளைஞர் ஒருவர் தாய் தந்தை மீதான அதீத அன்பால் அவர்களுக்கு கோயில் கட்டி ஆண்டுதோறும் கும்பாபிஷேகம் நடத்தி வருவது வியப்பை ஏற்படுத்தி வருகிறது.
கோவை புளியங்குளத்தை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். பெற்றோர் மீது அதீத அன்பு கொண்ட இவர், உடுமலை அடுத்த தீபாலப்பட்டி கிராமத்தில், 2 ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் தமது தாய், தந்தைக்கு கோயில் கட்டி அவர்களது சிலையை நிறுவியுள்ளார். பெற்றோரின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்து சொந்தபந்தம், கிராமமக்கள் என 500க்கும் மேற்பட்டோரை அழைத்து கிடா வெட்டி, விருந்து வைத்துள்ளார்.
ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகள் என திருவிழாவை போல பெற்றோரின் நினைவு தினத்தை ரமேஷ்குமார் அனுசரித்தார். தாய், தந்தைக்கு கோயில் கட்டிய இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியதால் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பலரும் இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர். சொத்துக்காக பெற்ற தாயையே கொள்ளும் மகன்களுக்கு மத்தியில், பெற்றோர் மீதான அதீத பாசத்தால் கோயில் கட்டி வழிபடும் மகனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.