திமுக அரசுக்கும் கூட்டணியில் பிரதானமான காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஏற்கனவே வாய்க்கால் தகராறு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதிக சீட்டுகள், ஆட்சியில் பங்கு என்று காங்கிரசில் எழுந்திருக்கும் கோஷங்களால் திமுக கடுப்பில் இருக்கிறது. சமீபத்தில் துணை முதல்வர் உதயநிதியை காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுச்சாமி விமர்சித்த விதமும் இரு கட்சிகளுக்குள் பெரிய புகைச்சலை உண்டுபண்ணியுள்ளன.
இந்நிலையில் காங்கிரஸ் மாநிலத் தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை, தனது தொகுதிக்கு உட்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரத்தில் தான் அவமானப்படுத்தப்பட்டதை ஊடகங்கள் முன்னிலையிலே மனம் திறந்து புலம்பியிருக்கிறார்.
இதனால் வாய்க்கால் தகராறாக இருந்த காங்கிரஸ்-திமுக பிரச்சினை ஏரி அளவுக்கு பெரிதாகிவிட்டது.
என்னதான் நடந்தது?
சென்னையின் குடிநீர் தேவைக்கு முக்கிய ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி சமீபத்திய கனமழையால் விரைவாக நிரம்பியுள்ளது.

தொடர்ச்சியான நீர்வரத்து காரணமாக அக்டோபர் 21 ஆம் தேதி மாலையில் வினாடிக்கு 100 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. மழையால் நீர் வரத்து அதிகரித்துக்கொண்டே இருந்த நிலையில் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்துகொண்டே இருந்தது. அதன்படி அக்டோபர் 22 ஆம் தேதி காலை நீர்வரத்து 2,220 கனஅடியாக உயர்ந்ததால், 500 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது.
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பதற்காக பூஜை போட்டு பூசணிக்காய் உடைத்து ஏரிக்கு பொறுப்பு அதிகரிகளாக இருக்கும் பொறியாளர்களே ஏரியை திறந்துவிட்டனர்.
இதையெல்லாம் டிவியில் பார்த்து தெரிந்துகொண்ட செம்பரம்பாக்கம் ஏரியை உள்ளடக்கிய ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாநில காங்கிரஸ் தலைவருமான செல்வப்பெருந்தகை ஊடகங்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு ஒரு திட்டத்தோடுதான் அக்டோபர் 22 பகல் பொழுதில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்றார்.
அங்கே அவருக்காக ஊடகங்கள் காத்திருந்தன. காரில் இருந்து இறங்காமலேயே தன்னை வரவேற்ற அணையின் பொறியாளரிடம் எகிற ஆரம்பித்தார் செல்வப்பெருந்தகை…
“ஏரியை திறக்குறது பத்தி மக்கள் பிரதிதியான இந்த தொகுதி எம்.எல்.ஏ. எனக்கு தெரியலை… சேர்மனுக்கு தெரியலை… மந்திரிக்கும் தெரியலை. நீங்களே திறந்து விடுறீங்கன்னா… நீர்வளத்துறை அரசுத் துறைதானே? மக்கள் பிரதிநிதிகள்கிட்ட சொல்லிட்டுத் திறக்கறதுதானே மரபு…
நீங்களே ஆட்சியாளர்களா மாறி தெறக்குறீங்க… இப்ப இந்த ஏரிய சுத்தி இருக்கிற 12, 13 ஊர்களுக்கு நான் தான போயி சொல்லணும்… ஏரிய திறந்துட்டாங்க பத்திரமா இருங்கனு நான் தான் போயி மக்களை பாத்து சொல்லணும். நீங்களா சொல்லுவீங்க? இந்தத் துறை யார் கட்டுப்பாட்ல இருக்குன்னே தெரியலை…
நேத்துலேர்ந்து டிவி பாத்துக்கிட்டே இருக்கேன். பூசணிக்காய் உடைக்குறீங்க…பூஜை பண்றீங்க. ஆனா எம்.எல்.ஏ.என்கிட்ட ஏன் வார்த்தை சொல்லலை? அப்புறம் எதுக்கு மக்கள் பிரதிநிதி? நாங்கள்லாம் தண்ணியை தொடக் கூடாதா? அவ்வளவு பிரஸ்டிஜு? வெறி பிடிச்சு கிடக்குதுங்க இந்த துறை… ஒரு அயோக்கியன் பொதுப்பணித் துறையில உட்கார்ந்திருக்கான்…

இப்ப நான் தானே ஊர்களுக்கு போயி மக்கள்கிட்ட போயி சொல்லி அவங்களுக்கு சாப்பாடு எல்லாம் அரேஞ்ச் பண்ணப் போறேன். நீங்களா பண்ணப் போறீங்க? “ என்று எகிறினார் செல்வப்பெருந்தகை.
ஆனால் செல்வப்பெருந்தகையின் சரமாரி கேள்விகளுக்கு அதிகாரிகள் எந்த வித பதிலும் சொல்லவில்லை. அதிகாரிகள் கொடுத்த டீயை கூட வேண்டாம் என்று சொல்லி விட்டு சிரித்துக் கொண்டே கோபத்துடன் புறப்பட்டார் செல்வப்பெருந்தகை.
இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் இருந்து எவ்வித ரியாக்ஷனும் வரவில்லை.
காங்கிரஸ் மாநிலச் செயலாள நாகூர் நவுஷத் நம்மிடம், “ என்ன நடக்கின்றது தமிழ்நாட்டில்? காங்கிரஸ் MLA மீது வழக்கு பதிவு செய்கிறார்கள். காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநிலத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் ,சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவரான செல்வப்பெருந்தகையை அதிகாரிகள் சேர்ந்து கொண்டு அவமானப்படுத்தியிருக்கிறார்கள்.
காங்கிரஸ் தலைவரை, காங்கிரஸ் மக்கள் பிரநிதிதிகளை உதாசீனப்படுத்தும் தைரியத்தை அதிகாரிகளுக்குத் யார் தந்தது?
கூட்டணி கட்சி என்று இனியும் பொறுத்து கொள்ள மாட்டோம் . முதல்வர் இதில் நேரடியாக தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோபமாக கூறினார்.













; ?>)
; ?>)
; ?>)