• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி புரட்டாசியை முன்னிட்டு சைவ மீலாது நபி கந்தூரி விழா..,

Byp Kumar

Sep 27, 2026

திண்டுக்கல் பேகம்பூர் பூச்சிநாயக்கன்பட்டி ஜின்னா நகர் நண்பர்கள் குழு சார்பில், மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் 10-ம் ஆண்டு மீலாது நபி கந்தூரி விழா சிறப்பாக நடைபெற்றது.

மீலாது நபி விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மத வேறுபாடுகளை கடந்து அனைத்து சமூக மக்களும் ஒன்றிணைந்து பங்கேற்றனர். விழாவின் முக்கிய நிகழ்வாக பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது. பூச்சிநாயக்கன்பட்டி பகுதி இந்துக்கள் அதிகளவில் வசிக்கும் பகுதியாக மட்டுமின்றி, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து சமூகத்தினரும் அன்புடனும் சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் பகுதியாகவும் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பல இந்து மக்கள் அசைவ உணவை தவிர்த்து விரதம் மற்றும் சைவ உணவு முறையை கடைப்பிடித்து வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு மீலாது நபி கந்தூரி விழாவில் அனைவரும் ஒன்றாக உணவருந்த வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் முழுமையாக சைவ உணவு வழங்கப்பட்டது. மத நல்லிணக்கத்தை செயல்பாட்டின் மூலம் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த ஏற்பாடு, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. முஸ்லிம் சகோதரர்கள் நடத்தும் விழாவில் இந்து, கிறிஸ்தவ சகோதரர்களும் பங்கேற்று உணவை பெற்றுச் சென்றனர்.

“மதங்கள் வேறாக இருந்தாலும் மனிதநேயம் ஒன்றே; உணவு பகிர்வோம், அன்பை வளர்ப்போம், ஒற்றுமையை நிலைநாட்டுவோம்” என்ற உயரிய எண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த கந்தூரி விழா அமைந்தது.

நண்பர்கள் குழுவின் சார்பில் தொடர்ந்து 10-வது ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி, அப்பகுதியில் நிலவி வரும் மத நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது. விழாவில் பங்கேற்ற பொதுமக்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் சமூக அக்கறையையும், அனைத்து மதத்தினரையும் அரவணைக்கும் ஒற்றுமை சிந்தனையையும் பாராட்டினர்.

சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம், மனிதநேயம் ஆகியவற்றை வலியுறுத்திய இந்த சைவ மீலாது நபி கந்தூரி விழா, பூச்சிநாயக்கன்பட்டி பகுதியில் மத ஒற்றுமையின் அடையாளமாக அமைந்தது.