


வட அமெரிக்காவில் ‘தி ஒன்டேர்மென்ட்’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மான், 1992-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ரோஜா என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதன் பின் தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இசைப்புயல் என்று அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் இதுவரை 7 தேசிய விருதுகளையும், 2 ஆஸ்கார் விருதுகளையும் வென்றுள்ளார்.

சமீபத்தில், நீர்சத்து குறைபாடு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஏ.ஆர்.ரஹ்மான். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை அளிக்கப்பட் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான் அடுத்ததாக நடத்த உள்ள இசைநிகழ்ச்சி குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். வட அமெரிக்காவில் ‘தி ஒன்டேர்மென்ட்’ (THE WONDERMENT) என்ற பெயரில் இசைநிகழ்ச்சி நடத்த உள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி கோடை காலத்தில் நடைபெறும் என்றும், விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

