

சத்தியமங்கலம் வனம் 70 சதவீதம் காடுகளை கொண்டுள்ளதால் இங்கு பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. குறிப்பாக குரங்குகள் அதிகளவில் உள்ளன.
ஈரோடு, கோவை, திருப்பூர் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையில் சாலையில் செல்லும்போது குரங்குகளுக்கு உணவளிப்பதால் அவை சாலையிலே அமர்ந்து விடுகின்றன. இதனால் அவ்வப்போது சாலையில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு இறந்துவிடும் சம்பவம் அரங்கேறி வருகிறது.
இதனை தடுக்க வனத்துறையினர் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டும் எவ்வித பயனும் இல்லை. சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி அந்தப் பகுதியை சேர்ந்த மக்களும் குரங்குக்கு ரோட்டில் உணவை வைப்பது தான் வேதனைக்குரிய விஷயமாக உள்ளது.

இந்த நிலையில் தாளவாடி பஸ் நிலையம் பகுதியில் குட்டி இறந்தது தெரியாமல் தாய் குரங்கு அதனை சுமந்து கொண்டு கடந்த மூன்று நாட்களாக சுற்றித்திரிந்து வருகிறது.
கூட்டத்தோடு சுற்றி திரியும் அந்த தாய் குரங்கின் பாசப்போராட்டம், பார்ப்போரை கவலை அடைய வைத்துள்ளது.

