• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோவையில் ரேஷன் கடையை உடைத்து அரிசி மூட்டைகளைச் சூறையாடிய ஒற்றை யானை!!

BySeenu

Aug 12, 2026

கோவையை அடுத்த கணுவாய் அருகே உள்ள கதிர் நாயக்கன் பாளையத்தில், CRPF கேம்ப் பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடையை உடைத்து, அங்கு இருந்த அரிசி மூட்டைகளை ஒற்றைக் காட்டு யானை ஒன்று சூறையாடிச் சாப்பிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று அதிகாலை சுமார் 5:15 மணி அளவில் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை, CRPF கேம்ப் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு வந்தது. கடையின் கதவை உடைத்து உள்ளே இருந்த அரிசி மூட்டைகளை வெளியே இழுத்துப் போட்டு நிதானமாகச் சாப்பிட்டது.

​இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த குடியிருப்புவாசி ஒருவர், யானை அரிசி மூட்டைகளைச் சூறையாடும் காட்சிகளைத் தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

யானை நுழைந்த இந்த CRPF கேம்ப் சாலையில் தினமும் அதிகாலை வேளையில் ஏராளமான CRPF வீரர்கள், பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். மேலும், விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களுக்கு வேலைக்குச் செல்லும் நேரமும் அதுவே என்பதால், திடீரென காட்டு யானை தாக்கி உயிர்ப்பலி ஏதேனும் ஏற்பட்டு விடுமோ ? என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் ஆழ்ந்து உள்ளனர்.

ரேஷன் கடையில் அரிசி சுவையை ருசித்த இந்த ஒற்றைக் காட்டு யானை, மீண்டும், மீண்டும் இதே பகுதிக்கு வர அதிக வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

​எனவே, வனத்துறையினர் உடனடியாக இப்பகுதியில் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தி, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து உள்ள அந்த ஒற்றைக் காட்டு யானையைத் தீவிரமாகக் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.