மதுரை வில்லாபுரம் அருகே குடியிருப்பு கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. ஏதேனும் உயிர் சேதத்தையும் எதிர்நோக்கி அசாதாரண சூழலில் நிற்கும் பாழடைந்த கட்டிடத்தை ஏதேனும் விபரீதம் நடப்பதற்கு முன் மாநகராட்சி நிர்வாகமே இடித்து தருமாறு உரிமையாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மதுரை வில்லாபுரம் அருகே உள்ள மகாலட்சுமி கோவில் 4வது தெருவில் வெங்கட் அம்மாள் என்பவருக்கு சொந்தமான 13 சென்ட் அளவுள்ள பழைய வீடு ஒன்று உள்ளது. வெங்கட் அம்மாள் மறைவிற்குப் பிறகு அவரது வாரிசுதாரர்கள் மொத்தம் பத்து பேர் உள்ளனர். கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடம் தற்போது எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயகரமான சூழலில் உள்ளது.
எனவே காமாட்சி என்பவர் சிந்தலமடைந்து கிடக்கும் இந்த கட்டிடத்தை இடிக்க வேண்டும் என முடிவு செய்த போது அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அச்சப்படுவதாகவும் இடிப்பதற்கு வரக்கூடிய வேலையாட்களும் கட்டிடம் மோசமாக உள்ளது என அஞ்சுவதால் மாநகராட்சி நிர்வாகமே பொறுப்பேற்று இந்த கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று திருப்பரங்குன்றம் மண்டலம்-5 மாநகராட்சி அலுவலகத்தை அணுகியுள்ளார். அதற்கான தொகையும் செலுத்துவதாக தெரிவித்துள்ளார் ஆனால் மாநகராட்சி அதிகாரிகளோ வீட்டு வரியை செலுத்துங்கள் பின்னர் நீங்களே கட்டிடத்தை இடித்துக் கொள்ளுங்கள் என்று கூறி கட்டிடத்தை இடிக்க மறுத்துள்ளனர். மேலும் அதில் ஏதேனும் உயிர் சேதம் ஏற்பட்டால் நீங்கள் தான் பொறுப்பு என்று உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பவே உடனே உரிமையாளர்கள் மாநகராட்சியே கட்டிடத்தை இடித்து தர வேண்டுமென வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார் அதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை மாநகராட்சி பொறுப்பேற்று ஒரு மாதத்திற்குள் இந்த கட்டிடத்தை இடிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் பல மாதங்களாகியும் இன்னும் மாநகராட்சி சார்பாக கட்டிடத்தை இடிக்க வராததால் கட்டிடம் மேலும் பாழடைந்து பராமரிப்பின்றி கிடைக்கிறது இந்த நிலையில் அந்த கட்டிடத்தில் சமூகவிரோதிகள் நடமாட்டம் இருப்பதாகவும் கஞ்சா, மது, புகையிலை போன்ற போதை வஸ்துகளை பயன்படுத்துவர்களின் கூடாரமாக மாறிவிட்டதாகவும் அங்கு வரக்கூடியவர்கள் போதையில் ஒருவருக்கொருவர் தாக்கி கொள்வதோடு பொதுமக்களையும் தாக்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் குறுகிய தெரு என்பதால் அக்கம் பக்கத்தில் உள்ள குடியிருப்புகளில் இருக்கும் குழந்தைகள் சாலையில் விளையாடும் போது அப்போது எதுவும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மாநகராட்சி உடனடியாக தலையிட்டு இந்த கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகிறார்கள் எனவும் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திடீரென இடிந்து விழுந்தது அப்போது குடியிருந்தவர்கள் வீட்டில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் இந்த கட்டிடத்தை இடிக்க வலியுறுத்தி ஐந்து வருடங்களாக போராடுகிறோம் மாநகராட்சி அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்று தெரிவித்தனர்.
