கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதை தடை செய்துள்ளது தமிழக அரசு. இதனை எதிர்க்கும் வகையில் முன்னாள் ஒன்றிய அமைச்சரும் பா.ஜ.க தேசிய குழு உறுப்பினருமான பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் நாகராஜா கோவில் முன் அக்டோபர் 07 அன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. நவராத்திரி விழா நடைபெறுவதை தடை விதிக்கப்பட்டுள்ளதை நீக்க வேண்டும், மாநில அரசின் கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், மேலும் பூஜைக்காக பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களை கோவிலினுள் ஏற்றுக்கொள்ள வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கட்சியின் மாநில செயலாளர் உமா ரதி, மாவட்ட பொருளாளர் முத்துராமன், மாநகர பார்வையாளர் தேவ், முன்னாள் நகர்மன்ற தலைவர் மீனாதேவ். முன்னாள் மாவட்ட தலைவர்கள் கணேசன், முத்துக்கிருஷ்ணள், வேல்பாண்டியன், மண்டல தலைவர்கள் அஜித். நாகராஜன், இந்து முன்னணி முன்னாள் மாவட்ட செயலாளர் நாஞ்சில் ராஜா உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அனுமதியின்றி கொரோனா காலத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வடசேரி காவல் நிலையத்தில் தற்போது பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உள்பட ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்ற 300 பெண்கள் உள்பட 900 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.