• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பத்திரமாக மீட்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது..!

Byவிஷா

Dec 20, 2023

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் திருச்செந்தூர் சென்னை ரயிலில் சிக்கிய கர்ப்பிணி பெண் நேற்று ஹெலிகாப்டர் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில், திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி வந்த திருச்செந்தூர் விரைவு ரயில், கனமழை காரணமாக தண்டவாளம் தெரியாததால் ரயில் ஓட்டுநர் ரயிலை, ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தினர். இந்த ரயிலில் 700க்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கி தவித்தனர். ரயில் நிலையத்தை சுற்றிலும் கடுமையாக வெள்ளம் சூழ்ந்ததால் அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதி கொங்கராய குறிச்சியை சேர்ந்த அனுசுயா (27) என்ற 9 மாத கர்ப்பிணிப் பெண்ணும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். அவரை நேற்று மதியம் விமானப்படையினர் ஹெலிகாப்டர் மூலமாக பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், தாயும் சேயும் நலமாக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.