• Fri. May 3rd, 2024

திண்டுக்கல் அருகே 300 ஆண்டு பழமையான மர வீரத்தூண் தஞ்சை பல்கலை மாணவர்கள் கண்டுபிடிப்பு

Byதரணி

Apr 5, 2024

திண்டுக்கல் அடுத்த காப்பிலியபட்டியில் மரத்தாலான ஒரு வீரத்தூண் உள்ளதாக காப்பிலியபட்டியைச் சேர்ந்த பேராசிரியர் நாகராஜ் தகவல் அளித்தார். அதன்பேரில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முதுகலை தொல்லியல் மாணவர்கள், துறை தலைவர் செல்வகுமார் தலைமையில் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். தூண் வீரதிம்மு அம்மன் மாலைக்கோயிலில் அமைந்துள்ளது. தரை மட்டத்திலிருந்து 2.65 மீட்டர் உயரமுடையது. தரைக்குக் கீழே 4 அடி புதைந்துள்ளது. இதன் அகலம் 29 செ.மீ., கனம் 27 செ.மீ. இது நான்கு புறங்களிலும் 10 சதுரங்கள் என 40 சதுரங்களில் அழகான சிற்பங்களுடன் காணப்படுகிறது. இதன் மேலே ஒரு சிறிய நான்கு தூண்களை உடைய மண்டபம் போன்ற அமைப்பு உள்ளது. ஒவ்வொரு சதுரமும் 25 முதல் 28 செ.மீ. அகலமும், 14 முதல் 15 செ.மீ. உயர அளவில் அமைந்து சுற்றிலும் அணிவேலைப்பாடுடைய 4 முதல் 5 செ.மீ. அளவுடைய விளிம்புப்பட்டையைக் கொண்டுள்ளது.இந்த நாற்பது சிற்பத்தொகுதிகளில், வில், அம்பு, வேல், கேடயம், வாள் ஆகியவற்றை ஏந்திய வீரர்கள், குதிரை வீரர், பெண்கள், மாடுகளுடன் புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணர், பன்றி வேட்டையாடுதல் ஆகிய சிற்பங்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலே உள்ள சதுரத்தில் கிருஷ்ணர் சிற்பமும் சந்திரன், சூரியன் சிற்பவடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *