• Fri. May 17th, 2024

இ-பாஸ் வழிகாட்டு நெறிமுறைகள் இன்று மாலை வெளியீடு

Byவிஷா

May 2, 2024

ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற சுற்றுலாத்தலங்களுக்குச் செல்வதற்கான இ-பாஸ் வழிகாட்டு நெறிமுறைகளும், எந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற விவரமும் இன்று மாலை வெளியாக உள்ளது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடிங்கி கிடக்கின்றனர். வீட்டிற்குள் இருந்தாலும் வெப்ப அலை காரணமாக வீடும் சுடத்தொடங்கியுள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் குழந்தைகளோடு வெளியூருக்கு செல்ல பொதுமக்கள் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு குடும்பத்தோடு பயணம் செய்து வருகின்றனர். ஓரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிக்கு செல்வதால் போக்குவரத்து நெரிசல், சுற்று சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
இதன் காரணமாக கட்டுப்பாடுகளை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் படி மே மாதம் 7 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் தேதிவரை ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல இ பாஸ் வாங்க வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாஸ் உள்ள வாகனங்கள் மட்டும் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது. இந்தநிலையில், இதன் மூலம் அதிகமாக மக்கள் கூடுவதை கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவையடுத்து தமிழக அரசு சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் இன்று மாலை தமிழக அரசின் உள்துறை மற்றும் பொதுத்துறை சார்பாக அறிவுறுத்தல்கள் வழிகாட்டு நெறிமுறைகளாக வெளியிடப்படவுள்ளது. அதன் படி, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பாக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்கள் அனுமதி, உள்ளூர் வாகனங்களுக்கான நடைமுறைகள் என்ன என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறை அறிவிப்பில் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்வோர் தமிழக அரசு சார்பாக பிரத்தியேகமாக வெளியிடப்படும் இணையதளத்தில் எந்த ஊரில் இருந்து ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்கிறீர்கள். எத்தனை பேர் செல்கிறீர்கள். எத்தனை நாள்.? எந்த வாகனம். வாகனத்தின் எண், எங்கு தங்கவுள்ளனர். என்பது தொடர்பாக விவரங்கள் கேட்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *