• Tue. Apr 30th, 2024

பள்ளிவாகனங்களுக்கு பள்ளிக்கல்வித்துறையின் புதிய உத்தரவு..

Byவிஷா

Jun 29, 2022

தமிழகத்தில் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமிரா, எச்சரிக்கை சென்சார் கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் ஜீன் 13 ஆம் தேதி1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதே போல் 12 ஆம் வகுப்புக்கு ஜூன் 20 தேதியும் 11 ஆம் வகுப்புக்கு ஜூன் 27 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதியும் 11 ஆம் வகுப்பிற்கு ஜூன் 24 ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை பள்ளி நிர்வாகமே தங்களது பேருந்துகளில் அழைத்து சென்று, மீண்டும் வீடுகளுக்கு கொண்டு சென்று விடுகிறது. மேலும் இந்த வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களும் மோட்டார் வாகன ஆய்வாளர்களும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் பள்ளி வாகனங்கள் விபத்தில் சிக்குவது தற்போது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நெல்லை பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 வயது எல்.கே.ஜி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அதே போல் கடந்த ஆண்டு சென்னை வளசரவாக்கத்தில் தனியார் பள்ளி வேன் மோதி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதில் தமிழகத்தில் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமிரா, எச்சரிக்கை சென்சார் கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பள்ளி வாகனங்களில் முன்பக்கம், பின்பக்கம் தலா ஒரு கேமிரா கட்டாயம் பொருத்த வேண்டும் என்றும் வாகனத்தின் பின்புறம் சென்சார் கருவியை வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *