• Tue. Nov 4th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

காளையார்கோவில் அருகேதொல்லியல் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட தங்க பொருள்கள்

ByA.Tamilselvan

Jun 27, 2022

காளையார்கோவில் அருகே கொல்லங்குடி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தங்க பொருள்கள் தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பு.
சிவகங்கை மாவட்டம் களையார்கோவில் அருகே கொல்லங்குடி ஊராட்சி பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வில் முதுமக்கள் தாழி ஓடுகளுக்கிடையே கிடைக்கப்பெற்ற தங்கத்தாலான குழாய்கள் தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பு. இதுகுறித்து சிவகங்கை தொல் நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது.
சிவகங்கை தொல்நடைக்குழு எனும் அமைப்பை நிறுவி தொல்லியல் சார்ந்த செய்திகளை மக்களிடத்து பரப்புதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மற்றும் தொன்மையானவற்றை பாதுகாத்தல், போன்ற பணிகளை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி தொடர்ந்து செய்து வருகிறோம்.
தற்பொழுது கொல்லங்குடி ஊராட்சி, சுந்தனேந்தல் சேகரம் உசிலனேந்தல் கண்மாய் பகுதியில், நேற்று 25.06.2022, சிவகங்கை தொல்நடைக்குழு உறுப்பினர் சரவணன் மேற்பரப்பு கள ஆய்வில் முதுமக்கள் தாழி ஓடுகளுக்கிடையே தங்கம் போன்ற பொருள் இரண்டு கிடைத்திருப்பதாக எனக்கு தகவல் அளித்தார், அங்கு சென்று விரிவான ஆய்வு மேற்கொண்டதில் தாலி போன்ற கயிற்றுச் சரடில் கோர்த்து அணியக்கூடிய குண்டுமணி என அழைக்கப் பெறும் அணிகலனாக இருக்கலாம் என்பது ஆய்வில் தெரியவந்தது.
குண்டுமணி,குழாய்.
தாலிச்சரடில் உள் நுழைத்து கோர்த்து அணியப்பெறும் தங்கத்தாலான இப்பொருள்களுள் நீண்டு குழாய் போல் இருப்பதை யானைக் குழாய் என்றும், குழாய் என்றும், அழைக்கின்றனர். மேலும் நீட்சி இல்லாமல் சிறிய அளவில் உள்ளதை மணி என்றும், குண்டுமணி என்றும், அழைக்கின்றனர்.
நமக்கு கிடைத்த பொருள்கள்.
குழாய் போன்று நீண்டு இல்லாமலும் மணி போன்று சிறிய அளவினதாக இல்லாமலும் இடைப்பட்டதாக உள்ளது. மேலும் மத்தளத்தை போன்ற வடிவம் உடையதாக இருபக்கம் சிறியதாகவும் நடுப்பகுதி பெரியதாகவும் காணப்படுகிறது இரு பக்கமுனைகளிலும் நடுப்பகுதியிலும் வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது.
பழமையான மணிக்குழாய்.
ஒன்று பார்வைக்கு நல்ல நிலையிலும் மற்றொன்று சிதைந்த நிலையிலும் காணப் பெறுகிறது, இரண்டும் ஒரே இடத்தில் கிடைத்ததாலும், ஒன்று சிதைவுற்று இருப்பதாலும் இது பழமையானதாக இருக்கலாம், முதுமக்கள் தாழிக்குள் இருந்து வெகு நாட்பட்டு ஓடுகளோடு வெளிப்பட்டிருக்கலாம் என எண்ண முடிகிறது.


இப்பகுதியில் முதுமக்கள் தாழிகள் முற்றிலும் சிதைந்த நிலையில் வெறும் ஓடுகளாய் பரந்து பட்டு மேற்பரப்பில் காணப்படுகிறது. இவ்வாறான மேடுகளை அடுத்தடுத்து காணமுடிகிறது. இந்த மேடுகளில் சுண்ணாம்புக் கற்கள் மேலெழும்பி அதிக அளவில் இருப்பதால் தாழி புதைத்த இடங்கள் என்பதை மேலும் உறுதி செய்ய முடிகிறது.
கண்டெடுத்த இரண்டு குண்டுமணிகள் குறித்து தொல்லியல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பெற்றது. தொல்லியல் துறை ஆணையர் முழு கூடுதல் பொறுப்பு இரா.சிவானந்தம் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று 26.06.2022, சிவகங்கை மாவட்ட தொல்லியல் அலுவலர் பரத் குமார்,மற்றும் இராமநாதபுர மாவட்ட தொல்லியல் அலுவலர் சுரேசு ஆகியோர் நேரடியாக இவ்விடத்தை பார்வையிட்டனர், பிறகு அவ்விடத்திலே கண்டெடுக்கப் பெற்ற தங்கத்தாலான பழமையான குழாய் போன்ற பொருள்கள் ஒப்படைக்கப் பெற்றன.மேலும் இப்பொருள் பற்றி தொல்லியல் துறையினரின் விரிவான ஆய்வுக்குப் பிறகு இறுதி முடிவு எட்டப்படும்.
வருவாய்த்துறை உதவியாளர் சுரேசு, மற்றும் சிவகங்கை தொல்நடைக் குழு செயலர் இரா.நரசிம்மன், பொருளாளர் ம. பிரபாகரன், உறுப்பினர் கா.சரவணன்,செயற்குழு உறுப்பினர் உ.முத்துக்குமார், தொல்நடைக் குழுவை சேர்ந்த பிரேம்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.