• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

கூட்டணிக்கு எதிராக வென்ற நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நகராட்சி தலைவர் பேரூராட்சி தலைவர் பதவிகளில் திமுகவினர் வெற்றி பெற்றதால், கூட்டணி கட்சி தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், தலைமையின் உத்தரவை மீறி போட்டியிட்டவர்கள் பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவிட்டுள்ளார். மேலும், இத்தகைய செயலால், கூனிக் குறுகி நிற்கிறேன் என்று கூட்டணிக்கு எதிராக வென்ற நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கூரியிருப்பதாவது , ‘கடமை – கண்ணியம் – கட்டுபாடு’தான் கழகத்தவருக்கு அழகு! அதனை மீறி மறைமுகத் தேர்தலில் சாதித்துவிட்டதாகச் சிலர் நினைக்கலாம்; குற்ற உணர்ச்சியால் நான் குறுகி நிற்கிறேன். கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோழமை உணர்வு எக்காலத்திலும் குலைந்துவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். தோழமைக் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாகப் பொறுப்பை விட்டு விலக வேண்டும்! விலகாவிட்டால் கழக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுவிட்டு, கழகத்தின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்தவர்கள் அந்தப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டு, என்னை வந்து சந்தியுங்கள்!’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
‘தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், தலைமையின் உத்தரவை மீறி போட்டியிட்டவர்கள் பதவி விலக வேண்டும்’ என்று திமுக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருபதாவது:
‘நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெற்ற வெற்றி மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்தது.
இதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளுக்குள் நடத்திய பேச்சுவார்த்தை தோழமை உணர்வுடன் அமைந்து அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் பங்கீடாக அமைந்ததும் அதிக அளவு மகிழ்ச்சியை அளித்தது.
அந்த மகிழ்ச்சியையும் சீர்குலைக்கும் வகையில், மறைமுகத் தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. வெற்றியை நினைத்தே கவலை அடைய வைக்கிறது.
பேரறிஞர் அண்ணா சொன்ன ‘கடமை – கண்ணியம் – கட்டுப்பாட்டில்’ மூன்றாவதாகச் சொல்லப்பட்ட கட்டுப்பாடுதான் மிக மிக முக்கியமானது என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள். அந்தக் கட்டுப்பாட்டை சிலர் காற்றில் பறக்கவிட்டு தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஏதோ சாதித்துவிட்டதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால், கழகத் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்களிடம், நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எந்த தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ அந்த தோழமை உணர்வை எந்த காலத்திலும் உருக்குலைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

கழகத் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கழகத் தலைவர் என்ற முறையில் எச்சரிக்கிறேன்.
உதயசூரியன் சின்னத்தில் போடியிட்டுவிட்டு கழகத்தின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்தவர்கள் அந்தப் பொறுப்பை விட்டு விலகிவிட்டு, என்னை வந்து சந்தியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மாவட்ட கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் இதற்குரிய நடவடிக்கையில் விரைந்து ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று அதிரடி உத்தரவிட்டுள்ளார்.