சென்னை ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி மற்றும் ‘மை பாரத்’ அமைப்பு இணைந்து தேசிய அரசியலமைப்பு தினம் – 2026 விழாவை இன்று சிறப்பாக கொண்டாடியது.
சாய்ராம் வளாகத்தில் உள்ள சிக்மா கலையரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆறுமுகம், புகழ்பெற்ற கல்வியாளர் பேராசிரியர் ஜி. பழனித்துரை, சாய்ராம் கல்விக் குழுமத்தின் தலைவர் டாக்டர் சாய் பிரகாஷ் லியோ முத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் வரவேற்பு நடனத்துடன் தொடங்கிய விழாவில், அமைச்சர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். தொடர்ந்து இந்திய அரசியலமைப்பின் முகவுரை வாசிக்கப்பட்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசியலமைப்பு தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
விழாவில் சிறப்புரையாற்றிய பேராசிரியர் ஜி. பழனித்துரை, “சுதந்திரத்திற்கு பிறகு அடையாளம் இன்றி இருந்த மக்களுக்கு அடையாளம் கொடுத்தது தான் நமது அரசியலமைப்பு. டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்திய சகோதரத்துவமே சிறந்த தேசத்தை உருவாக்கும். அரசியலமைப்பை தினமும் படிப்பது நம்மை பொறுப்புள்ள மனிதர்களாக மாற்றும்” என்றார்.

தொடர்ந்து பேசிய சாய்ராம் குழுமத்தின் CEO டாக்டர் சாய் பிரகாஷ் லியோ முத்து, “கல்வி என்பது நன்றாக கற்கவும், நன்றாக சம்பாதிக்கவும் உதவ வேண்டும். நாம் பேசும் கருத்துகள் வெறும் சத்தமாக இல்லாமல், மற்றவர்களுக்கு தகவல் தருவதாக இருக்க வேண்டும்” என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
தலைமை உரையாற்றிய அமைச்சர் ராஜ்மோகன் ஆறுமுகம், “1949 நவம்பர் 26-ல் தான் இந்தியா சுயமாக இயங்க முடியும் என்று நம்பி அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது உலகிலேயே மிக நீளமான எழுதப்பட்ட அரசியலமைப்பு. இதை வடிவமைத்த டாக்டர் அம்பேத்கருக்கு நன்றி” என்றார்.

மேலும், “சராசரி மாணவர், மெல்ல கற்பவர் என்று சொல்லாமல், தங்களுக்குரிய வழியில் கற்பவர்கள் என்று அழைக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது” என்று அவர் குறிப்பிட்டார்.
இறுதியாக சாய்ராம் குழுமத்தின் CIO நரேஷ் ராஜ் நன்றியுரை ஆற்ற, தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது.


