• Tue. Nov 17th, 2026

2027 ஜனவரியில் ஜனநாயக மோட்டார் மக்கள் கட்சி உதயம் சென்னையில் ஓட்டுநர் சங்கங்கள் முடிவு..,

ByPrabhu Sekar

Nov 17, 2026

சென்னையில் அனைத்து ஓட்டுநர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மோட்டார் துறை சார்ந்த பல்வேறு சங்கங்களின் முக்கிய பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் 2027 ஜனவரி மாதம் ஜனநாயக மோட்டார் மக்கள் கட்சியை தொடங்குவது என ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாகிர் உசேன், ஆட்டோ, கால் டாக்ஸி, மேக்ஸி கேப், சரக்கு வாகனங்கள், ஆம்னி பஸ், மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் என பல்வேறு பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருவதாகவும், ஆனால் இதுவரை ஆண்ட கட்சிகளும், தற்போது ஆளும் கட்சியும் தங்கள் கோரிக்கைகளுக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

எனவே மோட்டார் துறை சார்ந்த ஓட்டுநர்கள், தொழிலாளர்கள், மெக்கானிக் உட்பட அனைவரின் நலனையும், தமிழக மக்களின் நலனையும் பாதுகாக்க இந்த கட்சியை தொடங்குவதாக அவர் கூறினார்.

இந்த கட்சியின் துவக்க விழா ஜனவரி மாதம் திருவண்ணாமலையில் அருள் கணேஷ் தலைமையில் நடைபெறும் என நெல்லை ஜெ.பால் கிருபாகரன் அறிவித்தார். நசிந்து வரும் தொழிலை அரசியல்படுத்தி வென்றே தீருவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், கடந்த 14 ஆண்டுகளாக போராடியும் 10 கோரிக்கைகளில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை என்றும், தங்களை அரசு ஒரு அமைப்பாக மட்டுமே பார்ப்பதாகவும், ஓட்டு வங்கியாக பார்க்கவில்லை என்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் வேதனை தெரிவித்தனர். இதனால் தான் ஓட்டு வங்கியாக மாறி தங்கள் உரிமைகளை வெல்ல கட்சி தொடங்குவதாக அவர்கள் கூறினர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் ஜாகிர் உசேன் தலைமையில் வெற்றிவேல், பால் கிருபாகரன், பாபு உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.