• Wed. Nov 25th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

தேனியில் கோர விபத்து..!

ByAjmalkhan saleemraja

Nov 25, 2026

தேனி அருகே சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் காருடன் தப்பிச் சென்றார்.

தேனியைச் சேர்ந்த கருப்பு மற்றும் சேகர் ஆகிய இருவரும், தேனி அருகே உள்ள கருவேல்நாயக்கன்பட்டி பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் தேனி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, அவர்கள் சாலையைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர், வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து வேகமாகத் தப்பிச் சென்றார்.

சாலையில் இருவர் உயிரிழந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்ற கார் ஓட்டுநரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.