• Wed. Nov 25th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

தேனியில் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்..,

ByAjmalkhan saleemraja

Nov 25, 2026

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சார்பில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேர்தல் வாக்குறுதியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதாகக் கூறி, அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

மேலும், கூட்டுறவு வங்கிகளில் 75 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்ற விவசாயிகளின் பயிர்க்கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர்கள், எவ்வித நிபந்தனையும் இன்றி அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, தங்களது கோரிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க விவசாயிகள் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், 10 பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறி விவசாயிகளைத் தடுத்து நிறுத்தினர்.

இதனால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, போலீசாரின் தடையை மீறி விவசாயிகள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் சென்று, பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதனால் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.