• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஊரடங்கு தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள் என்ன?

ஒமிக்ரான் வகை கொரோனா கிருமி பரவல் அதிகரித்துவரும் நிலையில், ஜனவரி 10ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்தும், புதிய கட்டுப்பாடுகளை விதித்தும் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.முன்னதாக, நேற்று (டிசம்பர் 31) முற்பகல் தலைமைச்செயலகத்தில் கொரோனா நிலவரம் தொடர்பாக, மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ. வேலு, மா. சுப்பிரமணியன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பின்னர், முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,
கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்வகையிலும், பரவிவரும் உருமாறிய கொரோனா ஒமிக்ரான் கிருமியைக் கருத்தில்கொண்டும், மக்கள்நலன் கருதியும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடு 10.1.2022 வரை நீட்டிக்கப்படுகிறது. பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூடுவதால் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி கீழ்க்காணும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய அறிவிப்புகள்:

சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.

மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Play Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை.

அனைத்து பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 10.1.2022 முடிய நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.

அனைத்து பொருட்காட்சிகள், புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள பின்வரும் செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

1) 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படும்.

2) வழிபாட்டுத் தலங்களைப் பொறுத்தவரை தற்போது நடைமுறையிலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளே தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.

3) உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.

4) பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் (Entertainment Park / Amusement Park) 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

5) திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.

6) இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.

7) துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

8) கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

9) உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

10) பொது போக்குவரத்து பேருந்துகளில் உள்ள இருக்கைகளுக்கு மிகாமல் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படும்.

11) மெட்ரோ இரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

12) திறந்த வெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.

13) உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50% பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.

14) அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Salons and Spas) ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

இவற்றைத் தவிர, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியினை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மேலும், மாவட்ட நிருவாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் குறிப்பாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசியினை கட்டாயம் செலுத்திக் கொள்ளுமாறும், மக்கள் நலன் கருதி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.