திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பேரூராட்சிக்கு உட்பட்ட சிங்காலிபட்டி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஊருக்கு அருகே தெய்வேந்திரன் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் அரசு அனுமதி பெற்று வீட்டுமனைகள் பிரித்து விற்பனை செய்து வந்தார்.

இந்நிலையில் சிங்காலிப்பட்டி கிராமத்திற்கு செல்லக்கூடிய ஓடை புறம்போக்கில் உள்ள பாதையை மறித்து தெய்வேந்திரன் வீட்டுமனைகள் பிரித்துள்ளார்.
வீட்டு மனை பிரித்த இடத்தில் இரண்டு நபர்கள் வீடு கட்டி குடியேறி கழிவு நீரை வெளியேற்றி வந்துள்ளனர்.
இதுகுறித்து புதிதாக வீடு கட்டி அவர்களிடம் கிராம மக்கள் கேட்ட பொழுது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது இது குறித்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் வடமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் முறைப்படி புகார் மனு அளித்தனர்.

புகார் மனுவின் படி பேரூராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலஅளவீடு செய்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ஓடை புறம்போக்கு நிலத்தை மீட்டெடுத்தனர். தற்பொழுது அந்த வழியாக சிங்காலிப்பட்டி கிராம மக்கள் வழக்கம் போல் பொது பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சிங்காலிபட்டிக்கு வந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் தெய்வேந்திரன் மற்றும் கோகிலா உட்பட மூன்று நபர்கள் ஊர் மக்களை தகாத வார்த்தைகளால் பேசியும் தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வடமதுரை காவல் நிலையத்தில் கிராம பொதுமக்கள் புகார் அளித்தும் காவல்துறையினர் ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கு சாதகமாக செயல்பட்டு சம்பந்தப்பட்டவர்களின் மீது எவ்வித நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் தங்களுக்கு உயிர் பாதுகாப்பு இல்லை எனக் கூறியும் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பகுதி சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இன்று 22.11.26 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
பின்னர் தங்களுக்கு உயிர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் மேலும் ஆதரவாக செயல்படும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் புகார் மனு அளித்தனர்


