• Mon. Nov 23rd, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

பிளாஸ்டிக் குடத்துடன் உயிருக்குப் போராடும் தெருநாய்..!

BySeenu

Nov 23, 2026

கோவை, மதுக்கரை பகுதியில், தலையில் உடைந்த பிளாஸ்டிக் குடத்தின் (வாய் பகுதி/மூடி) பாதிப் பகுதி சிக்கிக் கொண்ட நிலையில், அதனைக் கழற்ற முடியாமல் தெருநாய் ஒன்று கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உணவின்றி போராடி வரும் பரிதாபச் சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, மதுக்கரைப் பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய் ஒன்று, உணவு தேடிய போது தற்செயலாக உடைந்த பிளாஸ்டிக் குடத்திற்குள் தலையை விட்டு உள்ளது. அப்போது, குடத்தின் உடைந்த வாய் பகுதி நாயின் கழுத்து மற்றும் தலைப் பகுதியில் இறுக்கமாகச் சிக்கிக் கொண்டது. நாயால் அந்தப் பிளாஸ்டிக் குடத்தைத் தானாகக் கழற்ற முடியாததால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தலையில் அந்தப் பிளாஸ்டிக் குடத்துடனேயே மதுக்கரைத் தெருக்களில் அலைந்து திரிந்து வருகிறது.

​மனிதர்கள் அருகில் சென்று அதனை அகற்ற முயன்றால், பயத்தின் காரணமாக அந்த நாய் அங்கு இருந்து ஓடி விடுவதால் பொதுமக்களால் அதனைப் பிடிக்க முடியவில்லை.

தலையில் பிளாஸ்டிக் குடம் மாட்டிக் கொண்டு உள்ளதால், அந்த நாயால் சரியாக உணவு உண்ணவோ, தண்ணீர் குடிக்கவோ முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறது. நாட்கள் செல்லச் செல்ல உடல் மெலிந்து சோர்வு அடைந்து காணப்படும் அந்த நாயைப் பார்ப்பதற்கே மிகவும் பரிதாபமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு மாதத்திற்கும் மேலாகத் தலையில் பிளாஸ்டிக் குடத்துடன் அவதிப்பட்டு வரும் அந்தத் தெருநாயைக் காப்பாற்ற, கோவை மற்றும் மதுக்கரைப் பகுதியைச் சேர்ந்த விலங்கு நல ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs) மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையினர் உடனடியாக முன்வர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.