• Mon. Nov 16th, 2026

நகை கொள்ளை வழக்கில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளுடன் கைது செய்யப்பட்ட குற்றவாளி நிஷாந்த்..,

ByKalamegam Viswanathan

Nov 16, 2026

தனிஷ்க் ஜுவல்லர்ஸ் நகை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி நிஷாந்த், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுடன் மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான நிஷாந்த் இன்று தர்மபுரி மாவட்டம் சேசம்பட்டி பகுதியில் அதியமான்கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, மதுரை துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையிலான தனிப்படை ஆய்வாளர்கள் சுபத்ரா மற்றும் பூமிநாதன் ஆகியோர் அடங்கிய தனிப்படை காவல்துறையினர் அதியமான்கோட்டை காவல் நிலையத்திற்குச் சென்றனர். அங்கு நிஷாந்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்த தனிப்படையினர், அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளைப் பறிமுதல் செய்து, நகைகளுடன் நிஷாந்தை மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

தற்போது எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் நிஷாந்திடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. நகையைக் கொள்ளையடிப்பதற்கான திட்டம் எவ்வாறு தீட்டப்பட்டது,

சம்பவத்திற்குப் பிறகு எங்கு தலைமறைவாக இருந்தார், மேலும் யார் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பைத் துல்லியமாகக் கணக்கிடுவதற்காக தனிஷ்க் நகைக்கடையிலிருந்து நகை எடைபோடும் இயந்திரங்கள் எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டு, தற்போது நகைகளை எடைபோடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.