தேனி மாவட்டம், போடி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற முருகப்பெருமான், வள்ளி மற்றும் தெய்வானை திருக்கல்யாண நிகழ்வில் வைக்கப்பட்ட திருமாங்கல்யம் சுற்றப்பட்ட ஒரே ஒரு தேங்காய், ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டது.

போடி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் இன்று காலை முருகப்பெருமான், வள்ளி மற்றும் தெய்வானை திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, திருக்கல்யாணத்தின்போது திருமாங்கல்யம் சுற்றி வைக்கப்பட்ட தேங்காய் ஏலத்திற்கு விடப்பட்டது. 11 ஆயிரம் ரூபாயில் தொடங்கிய ஏலத்தில் பக்தர்கள் ஆர்வத்துடன் போட்டி போட்டு ஏலம் கேட்டனர்.
சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற ஏலத்தின் முடிவில், மதுரையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினர் ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்திற்கு தேங்காயை ஏலம் எடுத்தனர்.

இதையடுத்து, ஏலம் எடுத்த குடும்பத்தினருக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்து, தேங்காய் வழங்கப்பட்டது.
ஒரே ஒரு தேங்காய் ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்திற்கு ஏலம் போன சம்பவம் பக்தர்களிடையே பெரும் வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.